3810.'முரணுடைத் தடக் கை ஓச்சி,
     முன்னவன், பின்வந்தேனை,
இருள்நிலைப் புறத்தின்காறும், உலகு
     எங்கும், தொடர இக் குன்று
அரண் உடைத்து ஆகி உய்ந்தேன்;
     ஆர் உயிர் துறக்கலாற்றேன்;
சரண் உனைப் புகுந்தேன்; என்னைத்
     தாங்குதல் தருமம்' என்றான்.

     முன்னவன்- எனக்கு அண்ணனாகிய வாலி; பின் வந்தேனை- பின்
பிறந்த தம்பியாகிய என்னை (அடிக்க); முரண் உடை - வலிமையுள்ள;
தடக்கை ஓச்சி -
பெரிய கையை ஓங்கிக் கொண்டு; இருள் நிலை புறத்தின்
காறும் -
இருட்டுக்கு இருப்பிடமாகிய இவ்வுலகத்திற்கு அப்புறம் வரையிலும்;
உலகு எங்கும் தொடர -
எல்லா உலகங்களிலும் பின்தொடர்ந்து துரத்த;
இக்குன்று அரண் உடைத்துஆகி -
இம்மலையையே
பாதுகாவலாகக்கொண்டு; உய்ந்தேன் - உயிர் பிழைத்தேன்; ஆர் உயிர்
துறக்கலாற்றேன் -
அரிய உயிரை விடுவதற்கும் முடியாதவனாகிய நான்;
சரண் உனைப் புகுந்தேன் -
உன்னை அடைக்கலமாக அடைந்தேன்;
என்னைத் தாங்குதல் -
என்னைக் காப்பாற்றுதல்; தருமம் என்றான்-
நினக்குரிய தருமமாகும் என்றான்.

     தம்பி என்ற உறவும் பாராது, வலிமை குறைந்தவன் என்ற போர்
முறையையும் நோக்காது, அஞ்சி ஓடியவனைத் துரத்தி ஓடுதல்
போர்முறைக்குப் பழியாகும் என்பதையும் உணராது வாலி, சுக்கிரீவனை
வருந்தினான் என அவ்வாலியின் முறையற்ற செயலைச் சுக்கிரீவன்
உணர்த்தினான். மதங்க முனிவர் சாபத்தால் ருசியமுகமலையில் வாலி வந்தால்
அவன் தலை வெடித்து இறப்பான் ஆதலால் 'இக்குன்று அரண் உடைத்து
ஆகி உய்ந்தேன்' என்றான்.

     இருள் நிலை புறத்தின் காறும் - அண்டத்தின் இறுதியில் சக்கரவாளகிரி
இருக்கின்றது என்றும், அதற்கு அப்புறம் இருள்நிலைப்புறம் (அந்தகாரம்)
உள்ளது என்றும் கூறுவது புராண மரபு.  தனக்கு உயிர்மேல் உள்ள காதலை
'ஆர் உயிர் துறக்கலாற்றேன்' என உணர்த்தினான்.  தன் இயலாமையை
உணர்த்தும் முகத்தான் 'சரண் உனைப் புகுந்தேன்; என்னைத் தாங்குதல்
தருமம்' என்றான்.  தன்னைத் தாங்காது விடுவானோ எனும் அச்சத்தாலும்
'என்னைத் தாங்குதல் தருமம்' என்றான். இதனால் வாலியை அழித்துத்
தன்னைக் காக்க வேண்டும் எனச் சுக்கிரீவன் கருதுவது புலப்படும்.      25