3811.என்றஅக் குரக்கு வேந்தை,
     இராமனும் இரங்கி நோக்கி,
'உன்தனக்குஉரிய இன்ப துன்பங்கள்
     உள்ள, முன்நாள்
சென்றன போக, மேல் வந்து
     உறுவன தீர்ப்பல்; அன்ன
நின்றன, எனக்கும் நிற்கும் நேர்'
     என மொழியும் நேரா,

     என்ற அக் குரக்கு வேந்தை - என்று கூறிய அந்தக் குரங்கினத்து
அரசனாகிய சுக்கிரீவனை; இராமனும் இரங்கி நோக்கி - இராமனும் மனம்
இரங்கிப் பார்த்து; உன்தனக்கு உரிய - உனக்கு உரிய; இன்ப துன்பங்கள்
உள்ள-
இன்ப துன்பங்களாக உள்ளனவற்றில்; முன்நாள் சென்றன போக-
இதற்கு முன் நீ அனுபவித்துக் கழிந்தன தவிர; மேல் வந்து உறுவன - இனி
வந்து சேரும் துன்பங்களை; தீர்ப்பல்- நான் நீக்குவேன்; அன்ன நின்றன-
இனி வருவனவாகிய இன்பதுன்பங்கள்; எனக்கும் நிற்கும் - எனக்கும்
உனக்கும்; நேர் - சமமாகும்''; என மொழியும் நேரா -  என்று
உறுதிமொழியும் கொடுத்து.

     'நேரா' என்னும் ஈற்றுச்சொல் (வினையெச்சம்) மேற்கவியில் 'என்றான்'
என்பதனோடு முடியும்.

     வாலிக்கு  அஞ்சிச் சரண்புக்க சுக்கிரீவன் நிலை கண்டு இராமன்
இரக்கம் கொண்டவனாதலின் 'இரங்கி நோக்கி' என்றார். நட்பிற்குச் சிறந்த
இலக்கணம் இன்பதுன்பங்களில் பங்கு கொள்வதாகும் என்பதை உணர்த்தும்
வகையால் ''அன்ன நின்றன எனக்கும் நிற்கும் நேர்'' என்றான்.  உடுக்கை
இழந்தவன் கை போல் ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு. (குறள் - 788)
என்றதற்கேற்ப 'மேல் வந்துறுவன தீர்ப்பல்' என இராமன் கூறினான். குரக்கு
வேந்தை - வேற்றுமையில் மென்தொடர் வன்தொடராயிற்று.  தீர்ப்பல் -
தன்மை ஒருமை வினைமுற்று, நினக்கு என்பது நிற்கு எனத் திரிந்தது.     26