3812.'மற்று,இனி உரைப்பது என்னே?
     வானிடை, மண்ணில், நின்னைச்
செற்றவர் என்னைச் செற்றார்;
     தீயரே எனினும், உன்னோடு
உற்றவர் எனக்கும் உற்றார்; உன்
     கிளை எனது; என் காதல்
சுற்றம், உன்சுற்றம்; நீ என்
     இன் உயிர்த் துணைவன்' என்றான்.

     மற்று இனி உரைப்பது என்னே - மேலும் நான் இனிச் சொல்
லக்கூடியது யாது உளது? வானிடை - விண்ணுலகிலும்; மண்ணில் -
மண்ணுலகிலும்; நின்னைச் செற்றவர் - நின்னை வருத்தியவர் ; என்னைச்
செற்றார் -
என்னை வருத்தியவராவர்; தீயரே எனினும் - தீயவராகவே
இருந்தாலும்; உன்னோடு உற்றவர் - உன்னோடு நட்புக்
கொண்டவர்கள்; எனக்கும் உற்றார் - எனக்கும் நண்பராவர்; உன் கிளை -
உன் உறவினர்; எனது - என் உறவினராவர்; என் காதல் சுற்றம் - என்
அன்புள்ள சுற்றத்தினர்; உன் சுற்றம் - உன் சுற்றத்தினராவர்; நீ என் இன்
உயிர்த்துணைவன் -
நீ எனது இனிய உயிர் போன்ற நண்பன்'; என்றான் -
என்றான்.

     இராமன் சுக்கிரீவனைத் தன் உயிர் நண்பனாகக் கொண்டமையால்
அவனுடைய பகைவர்களும் நண்பர்களும் சுற்றத்தினரும் தனக்கும் முறையே
பகைவர், நண்பர், சுற்றத்தினர் ஆவர் எனக்கூறித் தன் நட்பின் உறுதித்
தன்மையை உணர்த்தினான். 'தீயரே எனினும் உன்னோடு உற்றவர் எனக்கும்
உற்றார்' என்று மேலும் தன் நட்பின் வலிமையை உரைத்தான்.  சுக்கிரீவனின்
உற்றார் நல்லவராக இருந்து, பின்னர்த் தீயராக மாறினும் அவர்களை
உற்றாராகக் கொள்வதன்றி விட்டு நீங்குதல் இல்லை என இராமன் உறுதி
கூறினான்.  ''என் உயிர் அனையாய் நீ; இளவல் உன் இளையான்' என்று
இராமன் குகனிடம் கூறியதை (1994) ஒப்பு நோக்கலாம்.  கிளை - உவமை
ஆகுபெயர்; எனது - ஒன்றன்பால் குறிப்பு முற்று; உயிர்த் துணைவன் -
உவமைத்தொகை; தீயரே - 'ஏ' தேற்றம்; எனினும் - உம்மை இழிவு சிறப்பு.
                                                            27