3813. | ஆர்த்ததுகுரக்குச் சேனை; அஞ்சனை சிறுவன் மேனி, போர்த்தன, பொடித்து உரோமப் புளகங்கள்; பூவின் மாரி தூர்த்தனர், விண்ணோர், மேகம் சொரிந்தென, அனகன் சொன்ன வார்த்தை, எக் குலத்துளோர்க்கும், மறையினும் மெய் என்று உன்னா. |
அனகன் சொன்ன வார்த்தை- குற்றமற்றவனாகிய இராமன் சொன்ன சொல்; எக்குலத்துளோர்க்கும் - எல்லாக் குலத்தில் தோன்றியவர்க்கும்; மறையினும் - வேதவாக்கைக் காட்டிலும்; மெய் என்று உன்னா - உண்மையானதாகும் என்று எண்ணி; குரக்குச் சேனை ஆர்த்தது- குரங்குக் கூட்டம் ஆரவாரம் செய்தது; அஞ்சனை சிறுவன் - அஞ்சனையின் புதல்வனான அனுமன்; மேனி - மேனியை; உரோமப் புளகங்கள்- மயிர்ச்சிலிப்புகள்; பொடித்துப் போர்த்தன - அரும்பி மறைத்து விட்டன; விண்ணோர் - தேவர்கள்; பூவின்மாரி தூர்த்தனர் - மலர் மழையால் பூமியை நிரப்பினர்; மேகம் சொரிந்தன- மேகங்கள் மழையைப் பொழிந்தன. இராமன் கூறிய உரைகளால் வாலிவதம் உறுதி என்ற மகிழ்ச்சியாலும், யாரினும் சிறந்த இராமன் நட்புக்கிடைத்த களிப்பாலும் குரங்குச் சேனை மகிழ்ந்தது எனலுமாம். தான் இராமனிடத்துத் தூதுபோய் வந்தது பயன்பெற்றதனால் அனுமன் மேனி பொடித்தனன். இராவண வதம் நடைபெறும்; தங்கள் துன்பம் நீங்க வழி ஏற்பட்டது என்ற மகிழ்ச்சியால் வானவர் பூமாரி பொழிந்தனர். இந்த நட்பால் நல்ல பயன் என்பதற்கு நன்னிமித்தமாக மேகம் மழை பொழிந்தது எனலாம். 28 |