3814.ஆண்டுஎழுந்து, அடியில் தாழ்ந்த
     அஞ்சனை சிங்கம், 'வாழி!
தூண் திரள் தடந் தோள்
     மைந்த! தோழனும் நீயும் வாழி!
ஈண்டு, நும் கோயில் எய்தி,
     இனிதின் நும் இருக்கை காண
வேண்டும்; நும் அருள் என்?'
     என்றான்; வீரனும், 'விழுமிது' என்றான்.

     ஆண்டு எழுந்து - அப்பொழுது எழுந்திருந்து; அடியில் தாழ்ந்த -
இராமனது திருவடிகளில் விழுந்து வணங்கிய; அஞ்சனை சிங்கம் -
அஞ்சனை ஈன்ற சிங்கம் போன்ற அனுமன்; தூண்திரள் தடந்தோள் மைந்த
-
தூணைப்போலத் திரண்ட பெரிய தோள்களை உடைய தசரதனின் மகனே!
வாழி -
வாழ்க!தோழனும் நீயும் வாழி- தோழனாகிய சுக்கிரீவனும் நீயும்
வாழ்க!ஈண்டு - இப்பொழுது (நீங்கள்); நும் கோயில் எய்தி - உமது
மாளிகையை அடைந்து; இனிதின் - இன்பமாக; நும் இருக்கை காண-
நுமது இருக்கையில் எழுந்தருளியிருத்தலைக் காண; வேண்டும் -
விரும்புகிறோம்; நும் அருள் என்- தங்கள் திருவுள்ளம் யாது?என்றான்-;
வீரனும் -
வீரனாகிய இராமனும்; விழுமிது என்றான்- 'சிறந்தது' என்று கூறி
உடன்பட்டான்.

     இராம சுக்கிரீவர் நட்புக் கொண்டமைக்கு அனுமன் மகிழ்ந்து வாழ்த்துக்
கூறிச் சுக்கிரீவன் இருப்பிடத்திற்கு வரவேண்டும் என்று வேண்ட, இராமனும்
அதற்கு உடன்பட்டான். மேலோரிடம் பேசுகையில் முதலில் வாழ்த்துக் கூறிப்
பின்னர்ச் செய்தி கூறல் முறையாதலின் அனுமன் 'வாழி' என வாழ்த்திப் பின்பு
பேசத் தொடங்கினான். சுக்கிரீவனும் இராமனும் நட்புரிமையோடுநெடுங்
காலம் வாழவேண்டும் என்ற விருப்பத்தால் 'தோழனும் நீயும் வாழி' என
வாழ்த்தினான்.  உரிமை பற்றிச் சுக்கிரீவன் மாளிகையை 'நும்கோயில்' என
இராமனை உளப்படுத்திக் கூறினான்.  அஞ்சனை சிங்கம் - அனுமன். முன்,
பின் நிகழ்ச்சிகளை எண்ணிச் சிங்க நோக்குப் போல் செயல்படுபவன்
ஆதலின், அவனைச் சிங்கம் என்று உவமை ஆகுபெயரால் கூறினார்.   29