எல்லோரும் மலர்ச் சோலை சென்றடைதல் 3815. | ஏகினர்- இரவி சேயும், இருவரும், அரிகள் ஏறும், ஊக வெஞ்சேனை சூழ, அறம் தொடர்ந்து உவந்து வாழ்த்த - நாகமும் , நரந்தக் காவும் நளின வாவிகளும் நண்ணி, போக பூமியையும் ஏசும் புது மலர்ச் சோலை புக்கார். |
இரவி சேயும் - சூரியன் மகனாகிய சுக்கிரீவனுக்கும்; இருவரும் - இராமலக்குவரும்; அரிகள் ஏறும் - குரங்குகளுக்குச் சிங்கம் போன்றவனான அனுமனும்; வெம் ஊகச் சேனைசூழ - கொடிய வானரச் சேனைகள் சூழ்ந்து வர; அறம் தொடர்ந்து - தருமதேவதை பின் தொடர்ந்து வந்து; உவந்து வாழ்த்த - மகிழ்ந்து வாழ்த்தவும்; நாகமும் - சுரபுன்னை மரங்களும்; நரந்தக்காவும் - நரந்தம் என்னும் மரங்களின் சோலையும்; நளின வாவிகளும் - தாமரை பொய்கைகளும்; நண்ணி - பொருந்தி; போக பூமியையும் ஏசும் - இன்பத்தை அனுபவிக்கும் போக பூமியாகிய சுவர்க்க லோகத்தையும் இகழ்கின்ற; புது மலர்ச் சோலை புக்கார் - அன்றலர்ந்த மலர்கள் நிறைந்த சோலையை அடைந்தனர். அழிந்து போவதாய் இருந்த தன்னை இராமசுக்கிரீவர் நட்புக் காக்க இருப்பதால், தருமதேவதை அவர்களைப் பின்தொடர்ந்து வாழ்த்தியது. சுவர்க்க லோகத்தில் பெறும் இன்பத்தினும் சிறந்த இன்பம் தரும் இடமாதலின் 'போக பூமியையும் ஏசும் புதுமலர்ச்சோலை' என்றார். தன் மாளிகைக்கு அழைத்துச் செல்வோன் ஆதலின் 'சுக்கிரீவனை முன்னவரும், விருந்தினர்களாகச் செல்வதால் இராமலக்குவரை அடுத்தும், அன்பும் அடக்கமும் கொண்டு இராமலக்குவர் பின் செல்லும் அனுமனை அவ்விருவர்க்குப் பின்னும், ஏனைய வானரங்களை அனுமனுக்குப் பின்னும் செல்லுமாறு வைத்துள்ள வைப்பு முறை நயம் பொருந்தியதாகும். 30 |