3816. | ஆரமும்அகிலும் துன்றி, அவிர் பளிக்கு அறை அளாவி, நாரம் நின்றன போல் தோன்றி, நவ மணித் தடங்கள்நீடும் பாரமும், மருங்கும், தெய்வத் தருவு, நீர்ப்பண்ணை ஆடும் சூர் அரமகளிர் ஊசல் துவன்றிய கம்மைத்து அன்றே. |
ஆரமும் அகிலும் துன்றி - (அச்சோலை) சந்தன மரங்களும் அகில் மரங்களும் நெருங்கப் பெற்று; அவிர் பளிக்கு அறை அளாவி - விளக்கம் மிக்க படிகப் பாறைகள் பொருத்தப்பெற்று; நாரம் நின்றன போல் - அவை தண்ணீர் நிறைந்து நின்றவை போல; தோன்றி - காணப்பட்டு (விளங்க); நவமணித் தடங்கள் - நவமணிகளால் அமைந்த பள்ளமான இடங்களின்; நீடும் பாரமும் - நீண்டகரைகளிலும்; மருங்கும் - பக்கங்களிலுமுள்ள; தெய்வத்தருவு - தெய்வத் தன்மையுடைய மரங்களில்; நீர்ப்பண்ணை ஆடும்- நீர் விளையாட்டைச் செய்யும்; சூர் அர மகளிர் - தெய்வ மகளிர்தம்; ஊசல் துவன்றி - ஊஞ்சல்கள் நெருங்கிய; சும்மைத்து - ஆரவாரத்தைஉடையது. சந்தனம் முதலிய சிறந்த மரங்களும், பளிக்கறைகளும் பொருந்தி, தேவமகளிர் இங்குள்ள நீர்நிலைகளில் நீராடி, மரங்களில் ஊஞ்சல் விளையாடப் பெற்ற சிறப்பினை உடையது அச்சோலை எனப்பட்டது. பளிக்கு - பளிங்கு; அறை - பாறை; நாரம் - தண்ணீர். இது வடசொல்; பாரம் - கரை; பண்ணை - மகளிர் விளையாட்டு; தரு - தருவு என உகரச்சாரியை பெற்று வந்தது, சும்மைத்து - ஒன்றன்பால் குறிப்புவினைமுற்று. தேவ மகளிர் ஊசலாடும் இயல்பினர் என்பதை 'வானவர் மகளிராடும் வாசம் நாறூசல் கண்டார்' (862) என்பதாலும் அறியலாம். 31 |