கலிவிருத்தம் 3817. | அயர்வுஇல் கேள்வி சால் அறிஞர் - வேலை முன், பயில்வு இல் கல்வியார் பொலிவு இல் பான்மை போல், குயிலும் மா மணிக் குழுவு சோதியால், வெயிலும், வெள்ளி வெண் மதியும், மேம்படா. |
அயர்வுஇல் கேள்விசால் - தளர்வு இல்லாத கேள்வியால் நிரம் பப்பெற்ற; அறிஞர் வேலைமுன் - அறிஞர்களின் கடல்போன்ற கூட்டத்திற்கு முன்; பயில்வு இல் கல்வியார் - கல்விப் பயிற்சி இல்லாதவர்கள்; பொலிவு இல் பான்மை போல் - மேன்மையில்லாது; விளங்குதல் போல; குயிலும் மாமணிக் குழுவும் சோதியால் - அச்சோலையில் பாதிக்கப்பட்ட சிறந்த மணிகளின் திரண்ட ஒளியால்; வெயிலும் - சூரிய ஒளியும்; வெள்ளி வெண் மதியும்- வெள்ளி போன்ற வெண்திங்களின் ஒளியும்; மேம்படா - மேம்பட்டுத் தோன்றவில்லை. இதனால் அங்குள்ள இரத்தினங்களின் ஒளி சூரிய சந்திரர்களின் ஒளியினுக்கு மிக்க விளங்குவது அறியப்படுகிறது. அயர்வு - ஐயம்திரிபு. கேள்வியானது கல்வி அறிவைப் பெருக்குதலால் 'கேள்விசால் அறிஞர்' என்றார். வேலை - கடல்; கடல் போன்ற அவையை உணர்த்திற்று; உவமை ஆகுபெயர். கற்றார் முன் கல்லார் போல என்பது உவமை. ''வாசகம் வல்லார் முன்னின்று யாவர் வாய் திறக்க வல்லார்'' (895) ''எழுத்தறியார் கல்விப் பெருக்கம் அனைத்தும் எழுத்தறிவார்க் காணின் இலையாம்'' (நன்னெறி - 21) என்பன ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கன. 32 |