இராமன் சுக்கிரீவனோடு விருந்துண்ணுதல் 3818. | ஏய அன்னது ஆம் இனிய சோலைவாய், மேய மைந்தரும், கவியின் வேந்தனும், தூய பூ அணைப் பொலிந்து தோன்றினார், ஆய அன்பினோடு அளவளாவுவார். |
ஏய அன்னது ஆம் - இத்தகைய சிறப்புக்கள் பொருந்திய; இனிய சோலைவாய் - இனிமைமிக்க சோலையிடத்து; மேய மைந்தரும் - சென்றடைந்த இராமலக்குவரும்; கவியின் வேந்தனும் - வானரத் தலைவனாகிய சுக்கிரீவனும; தூய பூ அணை - தூய்மையான மல ரணைமீது; பொலிந்து தோன்றினார்- சிறக்க வீற்றிருந்தவர்களாய்; ஆய அன்பினோடு- பொருந்தியுள்ள அன்போடு; அளவளாவுவார் - பேசலாயினர். சோலையிலுள்ள மலர்களால் ஆன பூ அனை பிறவற்றினும் பொலிவு மிக்கதாக விளங்கியதால் 'பூ அணைப் பொலிந்து தோன்றினார்' என்றார். அளவளாவுதல்- நெஞ்சம் கலந்து பேசுதல், சோலைவாய் - வாய் ஏழன் உருபு. இராமலக்குவரும் சுக்கிரீவனும் மலரணையில் ஒருங்கமர்ந்து அன்பொடு உரையாடியமை இப்பாடலில் புலப்படுகிறது. 33 |