3819. | கனியும்,கந்தமும், காயும் தூயன இனிய யாவையும் கொணர, யாரினும் புனிதன் மஞ்சனத் தொழில் புரிந்து, பின் இனிது இருந்து, நல் விருந்தும் ஆயினான். |
கனியும் - பழங்களும்; கந்தமும் - கிழங்குகளும்; காயும்- காய்களும்; தூயன இனிய யாவையும் - தூய்மையாயும் இனிமையாயும் உள்ள யாவற்றையும்; கொணர - (வானரர்கள்) கொண்டுவர; யாரினும் புனிதன் - யாவரினும் தூய்மையானவன் ஆகிய இராமன்; மஞ்சனத் தொழில் புரிந்து- நீராடுதலைச் செய்து; பின் இனிது இருந்து - பின்னர் இனிமையாக இருந்து; நல் விருந்தும் ஆயினான் - சுக்கிரீவற்கு நல்ல விருந்தாளியும் ஆனான். (விருந்துண்டான்). சுக்கிரீவன் தன் பரிவாரங்களைக் கொண்டு விருந்து அளிக்க, இராமன் நீராடி விருந்துண்டான். கந்தம் - கிழங்கு - வடசொல். விருந்து- புதுமை - விருந்தினர்களைக் குறித்ததால் உவம ஆகுபெயர். விருந்தும் - உம்மை இறந்தது தழுவிய எச்ச உம்மை - நண்பன் ஆனதை உடன் தழுவியது. 34 |