சுக்கிரீவன் நிலையை அனுமன் உரைத்தல் 3821. | என்றவேலையில் எழுந்து, மாருதி, குன்று போல நின்று, இரு கை கூப்பினான் - 'நின்ற நீதியாய்! நெடிது கேட்டியால்! ஒன்று, யான் உனக்கு உரைப்பது உண்டு' எனா: |
என்ற வேலையில் - என்று இராமன் சுக்கிரீவனை வினவிய பொழுதில்; மாருதி - அனுமன்; குன்று போல எழுந்து நின்று - மலை போல எழுந்து நின்று; இருகை கூப்பினான் - இரண்டு கைகளையும் கூப்பியவனாய்; நின்ற நீதியாய் - (இராமனை நோக்கி) 'நிலை பெற்ற நீதியை உடையவனே! யான் உனக்கு - நான் உனக்கு; உரைப்பது ஒன்று உண்டு - சொல்ல வேண்டுவது ஒன்று உண்டு; நெடிது கேட்டி - அதனைத் தொடக்கம் முதல் இறுதி வரை கேட்பாயாக'; எனா - என்று கூறி . . . . தன் மனைவியை இழந்த செய்தியைச் சுக்கிரீவன் தானே கூறுதல் தகுதி அன்று என்று கருதி, அனுமன் அதைக் கூறினான். விருந்தினரை மனைவியுடன் இருந்தே உபசரித்தல் இல்வாழ்வானுக்கு முறை என்பதை உணர்ந்தே இராமன் வினாவினான் என்பதைக் குறிப்பிட 'நின்ற நீதியாய்' என விளித்தான். 'என்று கூறி' (எனா) என்ற எச்சம் மேல்வரும் அனுமன் கூற்றுகை நோக்கி நின்றது. 36 |