3823.'கழறுதேவரோடு, அவுணர் கண்ணின் நின்று,
உழலும் மந்தரத்து உருவு தேய, முன்,
அழலும் கோள் அரா அகடு நீ விட,
சுழலும் வேலையைக் கடையும் தோளினான்.

     கழறு தேவரோடு- சிறப்பித்துச் சொல்லப்படுகின்ற தேவர் களோடு;
அவுணர் -
அவுணர்களின்; கண்ணின் நின்று - கண்முன் நின்று; உழலும்
மந்தரத்து
- (மத்தாகிச்) சுழல்கின்ற மந்தரமலையின்; உருவுதேய - வடிவம்
தேயவும்; அழலும் கோள் அரா - சீறிக்கோபிக்கும் வலிய (கடைகயிறாகிய)
வாசுகியென்னும் பாம்பின்; அகடு தீ விட - வயிறு நெருப்பைக் கக்கவும்;
சுழலும் வேலையை -
அலைகின்ற திருப்பாற்கடலை; முன் -
முற்காலத்தில்; கடையும் தோளினான் - (தான் ஒருவனாகக்) கடைந்த
தோளினை உடையவன்.

     வலிமையும் வரங்களும் பெற்று தேவ அசுரர்களால் செய்ய முடியாத
செயலை வாலி தான் ஒருவனாகவே செய்து முடித்தான் என்பதால் அவனது
பெருவலி பெறப்படுகிறது.  திருப்பாற்கடலில் அமுதம் எடுக்க முனைந்த
அமரரும் அசுரரும் முயன்று வலியிலராய் நிற்க, அங்கு வந்த வாலி, அவர்கள்
வேண்டுதலால் தான் ஒருவனாகவே பாற்கடலைக் கடைந்து அமுதெழச்
செய்தான் என்பது வரலாறு.  இச்செயலைப் பின்னரும் ''வேலையை விலங்கல்
மத்தில், சுற்றிய நாகம் தேய அமுது எழக் கடைந்த தோளான்'' (5257) என்று
அனுமன் புகழ்ந்து பேசுவதைக் காணலாம்.  இவ்வரலாறு காஞ்சிப்புராணத்து
மணிகண்டேசுரப் படலத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.              38