3825. | 'கிட்டுவார்பொரக் கிடைக்கின், அன்னவர் பட்ட நல் வலம் பாகம் எய்துவான்; எட்டு மாதிரத்து இறுதி, நாளும் உற்று, அட்ட மூர்த்தி தாள் பணியும் ஆற்றலான்; |
கிட்டுவார் பொரக் கிடைக்கின் - போர்கருதி தன் எதிரே வருபவர் கிடைக்கப்பெற்றால்; அன்னவர் பட்ட நல்வலம்- அவர்களிடம் உள்ள நல்ல வலிமையில்; பாகம் எய்துவான் - பாதியைத் தான் அடைவான்; எட்டு மாதிரத்து இறுதி - எட்டுத் திக்கு எல்லையிலும்; நாளும் உற்று - நாள்தோறும் சென்று; அட்ட மூர்த்தி - அட்டமூர்த்தியாய் விளங்கும் சிவபிரானின்; தாள்பணியும் - திருவடிகளை வணங்குகிற; ஆற்றலான் - ஆற்றலையுடைவன். வாலி, தன்னொடு போர்செய்வார் வலிமையில் பாதி தனக்கு வருமாறு சிவன்பால் வரம்பெற்றிருந்தான். இதனை 'இரங்கியான் நிற்ப என் வலி அவன் வயின் எய்த வரம் கொள் வாலிபால் தோற்றனென்' (6177) என்ற இராவணன் கூற்றாலும் அறியலாம். அட்டமூர்த்திகள் - பஞ்ச பூதங்கள், சூரியன், சந்திரன், இயமானன் என்பன. இவ்வெட்டையும் திருமேனியாய்க் கொண்டவனாதலின்; சிவபிரான் 'அட்ட மூர்த்தி' எனப்பட்டான். நாளும் எட்டுத் திசைகளுக்குச் சென்று சிவன்தான் பணிந்து வரும் ஆற்றலை உடையவனாதலின் 'ஆற்றலான்' என்றார். வாலிக்குள்ள வரபலமும், தெய்வபக்தியும் இப்பாடலால் உணர்த்தப்படுகின்றன. 40 |