3826. | 'கால்செலாது அவன் முன்னர்; கந்த வேள் வேல் செலாது அவன் மார்பில்; வென்றியான் வால் செலாத வாய் அலது, இராவணன் கோல் செலாது; அவன் குடை செலாது அரோ. |
அவன் முன்னர் - அந்த வாலியின் வேகத்திற்கு முன்னதாக; கால் செலாது - காற்றுச் செல்லாது; அவன் மார்பில் - அவ்வாலியின் மார்பில்; கந்தவேள் வேல் செலாது - முருகப்பிரானின் வேலும் நுழையாது; வென்றியான் - வெற்றியை உடையவனான அவ்வாலியின்; வால் செலாத வாய் அலது- வால் செல்லாத இடத்தில் அல்லாமல் (வால் சென்ற இடத்தில்); இராவணன் கோல் செலாது - இராவணனது ஆட்சி செல்லாது; அவன் குடை செலாது - அவ்விராவணனது வெற்றிக் குடையும் செல்லாது. வாலியின் விரைந்த செலவையும், அவனது வன்மை, வென்றிகளையும் இப்பாடல் உணர்த்துகிறது. கால் - காற்று. வலிமையில் சிறந்தவன் வாயு தேவன். அந்தக் காற்றும் வேகத்தில் வாலியின் வேகத்திற்குத் தோற்றுவிடும் என்பது கருத்து. சரவணப் பொய்கையில் ஆறு உருவங்களாய்க் கிடந்து பார்வதிதேவியால் ஓருருவம் ஆக்கப்பட்டமையால் 'கந்தன்' எனப் பெயர்பெற்றான். கந்தவேள் - இருபெயரொட்டு; கந்தனாகிய வேள். வேள் - வேட்கையை உண்டு பண்ணுபவன். இச்சொல் மன்மதனுக்கும் பெயர் ஆதலால் அதனை விலக்குதற்குக் 'கந்தவேள்' என்றார். கிரவுஞ்சம் என்னும் மலையைப் பிளந்த முருகன் வேலும் வாலியின் மார்பைத் துளைக்காது என்பதால் வாலியுடைய மார்பின் வன்மை புலப்படும். வென்றியான் - வாலி - இந்திரன் முதலிய எல்லாத் தேவர்களையும் வென்ற இராவணனது கோலும் குடையும் வாலியின் வாலி சென்ற இடத்துச் செல்லாது என வாலியின் வீரமிகுதி கூறப்பட்டது. முன் அவ்வாலியின் வாலில் கட்டுண்டு இராவணன் இடர்ப்பட்டவனாதலின், அவ்வாலுக்கு அஞ்சி அவ்விடம் செல்லமாட்டான்; அவ்வாலுக்கே அஞ்சுபவன் வாலியின் தோள்வலிக்கு எதிர்நிற்கமாட்டான் என்பது கருத்து. வாலியின் வாலுக்கு இராவணன் அஞ்சுபவன் என்பதை ''வெஞ்சின வாலி மீளான், வாலும் போய் விளிந்தது அன்றே'' (5888), 'நிறையடிக் கோல வாலின் நிலைமையை நினையுந்தோறும் பறையடிக்கின்ற அந்தப் பயம்மிகப் பறந்ததன்றே' (4084) என்ற அனுமன், அங்கதன் கூற்றுகளால் முறையே அறியலாம். 'வரங்கொள் வாலிபால் தோற்றனென்' (6177) என்று இராவணன் கூறுவதும் காண்க. பின்னர் வாலியும் இராவணனும் நட்புக்கொண்டனராதலின் இராவணனைக் கொல்வதற்கு வாலியைக் கொல்வது இன்றியமையாதது என்பது புலப்படுகிறது. 41 |