3830. | 'கடல் உளைப்பதும், கால் சலிப்பதும், மிடல் அருக்கர் தேர் மீது செல்வதும் தொடர மற்றவன் சுளியும் என்று அலால், - அடலின் வெற்றியாய்! - அயலின் ஆவவோ? |
அடலின் வெற்றியாய் - வலிமையால் பெற்ற வெற்றி உடையவனே! தொடர - இடைவிடாமல்; கடல் உளைப்பதும் - கரை கடவாமல் கடல் ஒலித்துக் கொண்டிருப்பதும்; கால் சலிப்பதும் - காற்றுவீசிக் கொண்டிருப்பதும்; மிடல் அருக்கர் - வலிமைமிக்க சூரியர்கள்; தேர்மீது செல்வதும்- தேர் மீதேறிச் செல்வதும்; அவன் - அவ்வொலி; சுளியும் என்று அலால் - சினம் கொள்வான் என்ற அச்சத்தினால் நிகழ்வதன்றி; அயலின் ஆவவோ - பிறிதொரு காரணத்தால் நிகழ்வனவோ? (அல்ல). இது வாலியின் கோபத்தை உணர்த்தியது. கடல் முதலியனவெல்லாம் அவன் கோபத்திற்கு அஞ்சியே நடக்கின்றன என்பதாம். உளைப்பது - மேன்மேலும் பொங்கி எழாமல் ஒரு நிலையில் அடங்கிநிற்றல்; சலிப்பது - எப்போதும் இயங்கி்க் கொண்டிருப்பது; தேர்மீது செல்வது - தோன்றியும் மறைந்தும் அந்தந்தக் காலத்திற்கேற்ப நடந்து கொள்ளல். வாலி சினத்திற்கு அஞ்சியே இயற்கையில் செயல்கள் நடைபெறுவதாகக் கூறியதால் ஏதுத்தற்குறிப்பேற்ற அணி. மாதந்தோறும் வெவ்வேறாகச் சூரியர் பன்னிருவர் தோன்றுவர் என்பதால் 'அருக்கர்' எனப் பன்மையால் கூறினான். தொடர - இச்சொல் இறுதிநிலை விளக்கணியாய் ஒலிப்பதும், சலிப்பதும், செல்வதும் என்பவற்றோடு இயையும். இறைவனுக்குக் கட்டுப்படும் இயற்கை, வாலிக்கும் கட்டுப்பட்டு இயங்கும் என்பதால் வாலி இறைவன் போன்ற வரம்பில் ஆற்றலுடையவன் என்பது விளங்கும். அல்லால் - அலால் எனத் தொகுத்தல் விகாரம் பெற்றது. 45 |