3831. | 'வெள்ளம் ஏழு பத்து உள்ள, மேருவைத் தள்ளல் ஆன தோள் அரியின் தானையான்; உள்ளம் ஒன்றி எவ் உயிரும் வாழுமால், - வள்ளலே! - அவன் வலியின் வன்மையால். |
ஏழுபத்து வெள்ளம் உள்ள - (அவ்வாலி) எழுபது வெள்ளம் என்கின்ற அளவு உள்ளதும்; மேருவைத் தள்ளல் ஆன - மேருமலையைத் தள்ளக்கூடியதுமான; தோள் அரியின் தானையான் - தோள் வலிமை உள்ளதுமான வானரப்படையை உடையவன்; வள்ளலே - வள்ளல்தன்மை உடையவனே! அவன் - அவ்வாலி; வலியின் வன்மையால் - வலிமையின் மிகுதியால்; உள்ளம் ஒன்றி - மனம் ஒன்று பட்டு; எவ்வுயிரும் வாழும் - எல்லா உயிர்களும் வாழ்கின்றன; வாலியின் சேனைச் சிறப்பும் ஆட்சிச் சிறப்பும் இங்குக் கூறப்பட்டுள்ளன. வள்ளல் என்பது இங்கு இராமனைக் குறிக்கும். வெள்ளம் என்றது பேரெண். யானை ஒன்றும், தேரொன்றும், குதிரை மூன்றும் காலாள் ஐந்தும் கொண்டது- பக்தி; பக்தி மூன்று கொண்டது சேனாமுகம்; சேனாமுகம் மூன்று கொண்டது குடமம்; குடமம் மூன்று கொண்டது கணம்; கணம் மூன்று கொண்டது வாகினி; வாகினி மூன்று கொண்டது பிரதனை; பிரதனை மூன்று கொண்டது சமூ; சமூ மூன்று கொண்டது அநீகினி; அநீகினி பத்துக் கொண்டது அக்குரோணி; அக்குரோணி எட்டுக் கொண்டது ஏகம்; ஏகம் எட்டுக் கொண்டது கோடி; கோடி எட்டுக் கொண்டது சங்கம்; சங்கம் எட்டுக் கொண்டது விந்தம்; விந்தம் எட்டுக் கொண்டது குமுதம்; குமுதம் எட்டுக் கொண்டது பதுமம்; பதுமம் எட்டுக் கொண்டது நாடு; நாடு எட்டு்க் கொண்டது சமுத்திரம்; சமுத்திரம் எட்டுக் கொண்டது வெள்ளம் என்பர். 46 |