3832.மழைஇடிப்பு உறா; வய
     வெஞ் சீய மா
முழை இடிப்பு உறா;
     முரண் வெங்காலும் மென்
தழை துடிப்புறச் சார்வு
     உறாது; - அவன்
விழைவிடத்தின்மேல்,
     விளிவை அஞ்சலால்.

     விளிவை அஞ்சலால் - (வாலி சினம் கொண்டால்) தமக்கு அழிவு
நேருமே என்று அஞ்சுவதால்; அவன் - அவ்வாலி; விழைவு இடத்தின்
மேல்
- விரும்பித் தங்கியிருக்கும் இடத்திற்கு எதிராக; மழை இடிப்பு உறா -
மேகம் இடித்து ஒலிக்கமாட்டா; வய வெம் சீயமா - வலிமை மிக்க கொடிய
சிங்கமாகிய விலங்குகள்; முழை இடிப்பு உறா - குகையில் இடிபோல்
முழங்கமாட்டா; முரண் வெம் காலும் - வலிய கொடிய காற்றும்; மென்
தழை துடிப்புற -
அங்குள்ள மெல்லிய இலைகள் நடுக்கம் கொள்ள; சார்வு
உறாது -
அவற்றின் பக்கத்தில் வராது.

     வாலி இருக்கும் இடத்தில் தன் வல்லமையைக் காட்டினால் தமக்கு இறுதி
நேரிடும் என்று அவனது வலிமைக்கு அஞ்சி மேகமும், சிங்கமும், காற்றும்
அடங்கி நடக்கும் என்பதால் வாலியின் பெருவலி உணர்த்தப்பட்டது. வாலி
விரும்பித் தங்கும் இடத்தே இடியோ, இடிபோன்ற முழக்கமோ கேளா; காற்று
மென்மையாக வீசும் என அறிய முடிகிறது.  'அவன் கடியுடை வியன்புலம்,
உருமு முரறாது அரவும் தப்பா கட்டுமாவும் உறுகண் செய்யா (பெரும்பாண் -
42 - 44) என்ற அடிகள் தொண்டைமான் இளந்திரையன் ஆட்சிச் சிறப்பை
உணர்த்துவதுடன் இதனையும் ஒப்பிடலாம்.  'கறங்கு கால் புகா; கதிரவன்
ஒளிபுகா; மறலி மறம் புகாது' (4857) என்பன முதலாக இராவணன்
ஆணைமிக்க ஆட்சி எல்லையைக் கம்பர் குறிப்பதும் ஒப்பிட்டுணரத்தக்கது.

    சீயம் மா - சீயமாகிய மா.  இருபெயரொட்டுப் பண்புத்தொகை.     47