3833. | 'மெய்க்கொள் வாலினால், மிடல் இராவணன் தொக்க தோள் உறத் தொடர்ப்படுத்த நாள், புக்கிலாதவும், பொழி அரத்த நீர் உக்கிலாத வேறு உலகம் யாவதோ? |
மெய்க் கொள் வாலினால்- தன் உடம்பில் உள்ள வாலினால்; மிடல் இராவணன் - வலிமை மிக்க இராவணனின்; தொக்க தோள் - இருபதாகச் சேர்ந்து விளங்கிய தோள்களை; உற - ஒரு சேரப் பொருந்தும்படி; தொடர்ப்படுத்த நாள் - கட்டிப் பிணித்த அந்நாளில்; புக்கிலாதவும் - அவன் செல்லாததும்; பொழி அரத்த நீர்- அவ் இராவணன் உடம்பினின்று சொரிந்த இரத்த வெள்ளம்; உக்கிலாத - சிந்தாததும் ஆகிய; வேறு உலகம் யாவதோ - வேறு உலகம் யாது உள்ளதோ? 'புக்கிலாத உலகம், அரத்த நீர் உக்கிலாத உலகம் வேறு யாவது' என்ற வினா. யாதும் இல்லை என்ற மறுதலைப் பொருளைத் தந்தது. நீர்ப்பொருள் ஒற்றுமைப்பற்றி 'அரத்த நீர்' எனப்பட்டது. வாலில் கட்டுண்ட இராவணன் வாலி சென்ற எல்லா உலகங்களிலும் புகுந்தான். அவன் குருதி எல்லா உலகங்களிலும் சிந்தியது என்பதாம். இதனால் இராவணனை வென்ற வீரமுடையவன் வாலி என்பது பெறப்பட்டது. சிவபூசை செய்து கொண்டிருந்த வாலியை இராவணன் பின்புறமாக வந்து பற்ற எண்ணியபோது, வாலி அவனை வாலினால் கட்டிக் கொண்டு எல்லா உலகங்களிலும் அவன் இரத்தம் சிந்துமாறு சுற்றிவந்து, பின்னர் அவன் வருந்தி வேண்டியதால் விடுத்தான் என்பது வரலாறு. இராவணன் வாலியின் வாலில் கட்டுண்ட நிலையை 'ஓர் இராவணன் என்பான் தன்னை, சுந்தரத்தோள்களோடும் வாலிடைத் தூங்கச் சுற்றி, சிந்துரக் கிரிகள் தாவித் திரிந்தனன்' (6997) என்ற அடிகளும் இதனை உணர்த்தும். 48 |