3834. | 'இந்திரன்தனிப் புதல்வன், இன் அளிச் சந்திரன் தழைத்தனைய தன்மையான், அந்தகன் தனக்கு அரிய ஆணையான், முந்தி வந்தனன், இவனின் - மொய்ம்பினோய்! |
மொய்ம்பினோய் - வலிமை உடையவனே! இந்திரன் தனிப் புதல்வன்- இந்திரனின் ஒப்பற்ற மைந்தனாகிய அவ்வாலி; இன் அளிச் சந்திரன் - இனிமையும் குளிர்ச்சியும் கொண்ட சந்திரன்; தழைத்தனைய தன்மையாள் - அனைத்துக் கலைகளுடன் வளர்ச்சி பெற்றது போன்ற வெண்ணிறத்தைஉடையவன்; அந்தகன் தனக்கு - யமனுக்கும்; அரிய ஆணையான் - கடத்தற்கரிய ஆணையை இடுபவன்; இவனின் - இந்தச் சுக்கிரீவனுக்கு; முந்திவந்தனன் - முன்னே தமையனாகப் (ஒரு தாய் வயிற்றில்) பிறந்தவன். இதனால் வாலியின் மேனிநிறத்தையும், ஆணைச் சிறப்பையும் உணர்த்தினான். எமனும் வாலியின் ஆணை வழியன்றிச் செயல்படான் என்பதால் வாலியின் ஆற்றல் புலப்பட்டது. வாலி சுக்கிரீவர்க்குத் தாய் ஒருத்தி; தந்தையர் இந்திரனும் சூரியனுமாகிய இருவர். அந்தகன் தனக்கும் - உயர்வு சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது; தழைத்தனைய என்பதை தழைத்தாலனைய என எச்சத் திரிபாகவாவது; தழைத்ததனைய என்பதன் விகாரமாகவாவது கொள்க. தம் வரலாற்றைத் தாமே கூறிக் கொள்வது தகுதியன்று என்று கருத்துடன், இராமபிரான் வரலாற்றை இலக்குவன் வாயிலாகவும், சுக்கிரீவன் வரலாற்றை அனுமன் வாயிலாகவும் கம்பர் அமைத்துள்ள நயம் காண்க. 49 |