சுக்கிரீவனோடு வாலி பகைமை கொண்ட காரணம்கூறுதல்

3835.'அன்னவன்எமக்கு
     அரசன் ஆகவே,
இன்னவன் இளம் பதம்
     இயற்றும் நாள்,
முன்னவன் குலப்
     பகைஞன், - முட்டினான் -
மின் எயிற்று வாள்
     அவுணன், வெம்மையான்.

     அன்னவன் - அத்தகையோனாகிய வாலி; எமன் அரசன் ஆகவே-
எங்களுக்கு அரசனாக இருக்க; இன்னவன் - இச்சுக்கிரீவன்; இளம்பதம்
இயற்றும் நாள் -
இளவரசுப் பதவியைத் தாங்கி ஆட்சி புரிந்த நாளில்; முன்
அவன் குலப் பகைஞன் -
முன்னமே வாலியின் குலப்பகைவனாய்
உள்ளவனான; மின் எயிற்று வாள் அவுணன் - மின்னல் போன்று ஒளி
வீசும் பற்களை உடைய வாள் போன்ற கொடிய மாயாவி என்னும் அசுரன்;
வெம்மையான்
- சினம் கொண்டவனாய் (வாலியை); முட்டினான் -
எதிர்த்தான்.

     மாயாவி: 'மயன் குமரன். துந்துபியின் சகோதரன்.  மந்தோதரி உடன்
பிறந்தவன்.  இவனேவாலியை யுத்தத்திற்கு அழைத்தவனாயிருக்கலாம்' - அபிதானசிந்தாமணி.                                           50