3836.'முட்டி நின்று, அவன்
     முரண் உரத்தின் நேர்
ஒட்ட, அஞ்சி, நெஞ்சு
     உலைய ஓடினான்;
''வட்ட மண்டலத்து அரிது
     வாழ்வு'' எனா,
எட்ட அரும் பெரும்
     பிலனுள் எய்தினான்.

     முட்டி நின்று- (அவ்வரக்கன்) அவ்வாறு வாலியோடு எதிர்த்துப் போர்
செய்த; அவன் முரண் உரத்தின் நேர் - அவனது வலிய ஆற்றலுக்கு
எதிரில்; ஒட்ட அஞ்சி - நின்ற போர்செய்வதற்கு அஞ்சி; நெஞ்சு உலைய
ஓடினான் -
மனம் நடுங்கத் தப்பி ஓடினான்; வட்ட மண்டலத்து - வட்ட
வடிவமாகிய பூமியில்; வாழ்வு அரிது - உயிர் வாழ்தல் அரிது; எனா -
என்று எண்ணி; எட்ட அரும் பெரும்பிலனுள் - எவரும் செல்லுதற்கரிய
பெரிய பிலத்துவாரத்துள்; எய்தினான் - புகுந்தான்.

     வாலியுடன் போரிடுகையில் மாயாவி தன் வலிமை குறைந்து, வாலியின்
வன்மை மிகுவதைக் கண்டதும் புறமுதுகு காட்டி ஓடிப் பின் பிலத்தினுள்
நுழைந்து ஒளித்தான்.  மாயாவி நுழைந்த பிலத்தின் அருமை புலப்பட
'எட்டரும் பெரும்பிலன்' என்றான்.  பிலம் - பூமிக்குள் செல்லும் சுரங்கவழி.
பிலன் - பிலம் என்பதன் ஈற்றுப்போலி.                            51