3838.'ஏகி, வாலியும் இருது ஏழொடு ஏழ்
வேக வெம் பிலம் தடவி, வெம்மையான்
மோக வென்றிமேல் முயல்வின் வைகிட,
சோகம் எய்தினன், துணை துளங்கினான்.

     வாலியும் - வாலியும்; ஏகி - சென்று; இருது ஏழொடு ஏழ் -
பதினான்கு பருவகால வரையிலும்; வேகம் - வேகத்தோடு; வெம்பிலம்
தடவி-
கொடிய பிலத்தினுள்ளே தேடிப் பார்த்து; வெம்மையான் -
கொடுந்தன்மையுடைய அசுரனை; மோக வென்றி மேல் - (வெல்லுதலாகிய)
விரும்பத்தக்க வெற்றிமேல் கருத்துடையவனாய்; முயல்வின் வைகிட -
அம்முயற்சியின் ஈடுபட்டிருக்க; துணை - தம்பியான சுக்கிரீவன்; சோகம்
எய்தினன் -
துன்பம் அடைந்தவனாய்; துளங்கினான் - கலங்கினான்.

     பிலத்துள் சென்ற வாலி அசுரனைத் தேடுதலும், தேடிக்கொண்டு
பிடித்தலும், பிடித்துப் போர்செய்தலும் ஆகிய செயல்களில் ஈடுபட்டு
இருபத்தெட்டு மாதங்கள் வெளிவராததனால் 'வாலிக்கு என்ன இடுக்கண்
நேர்ந்ததோ' எனக் காவல் காத்து நின்ற சுக்கிரீவன் கலங்கினான்.  இருது -
இரண்டு மாத காலங்களைக் கொண்டது.  ஏழொடு ஏழ் - பதினான்கு
பருவங்கள் - இருபத்தெட்டு மாதகாலம்.  துணை - சுக்கிரீவன். இருபத்தெட்டு
மாதங்கள் கழிந்தமையால் வாலி இறந்திருப்பானோ என்ற ஐயம் சுக்கிரீவனுக்கு
ஏற்படலாயிற்று. வெற்றிமேல் கொண்ட மோகத்தால் 'மோகவென்றி' ஆயிற்று.
                                                            53