3839.'அழுதுஅழுங்குறும்
     இவனை, அன்பினின்
தொழுது இரந்து, ''நின்
     தொழில் இது; ஆதலால்
எழுது வென்றியாய்! அரசு
     செய்க! '' என,
''பழுது இது'' என்றனன்,
     பரியும் நெஞ்சினான்.

     அழுது அழுங்குறும் - புலம்பி வருந்துகின்ற; இவனை - இச்சுக்
கிரீவனை; அன்பினில் தொழுது இரந்து - (நாங்கள்) அன்போடு வணங்கி
வேண்டி; எழுது வென்றியாய் - நூல்களில் எழுதத்தக்க வெற்றியை
உடையவனே! நின்தொழில் இது ஆதலால் - இளவரசனாகிய நினக்குரிய
தொழில் இவ்வரசு செய்தலே ஆதலின்; அரசு செய்க - அரசாட்சியை
ஏற்றுக்கொள்வாயாக; என - என்று சொல்ல; பரியும் நெஞ்சினான்-
(வாலியின் பிரிவால்) வருந்துகின்ற மனமுடையவனான சுக்கிரீவன்; இது
பழுது-
இது குற்றமாகும்; என்றனன் - என்று உரைத்தான்.

     இரத்தல் - வேண்டுதல் பொருளில் வந்தது. நெடுநாள் கழிந்தும் வாலி
மீண்டுவராததால், வாலிக்கு ஏதேனும் தீங்கு நேரிட்டதோ எனக் கருதியவராய்,
இளவரசனே அரசனுக்குப் பின்னர் அரசு பெற வேண்டும் என்ற முறைமை
கருதி 'நின் தொழில் இது ஆதலால்' என்றனர்.  பழுது இது என்றது -
வாலிக்கரிய அரசைத் தான் ஆளுதல் குற்றம் என்றது.  இதனால்
சுக்கிரீவனுக்கு அரசு புரியும் விருப்பமின்மை புலப்படும்.

     எழுது வென்றியாய் - வெற்றித் தூண்களில் எழுதத்தக்க வென்றியை
உடையவனே எனவும் பொருள் கொள்ளலாம். 'பழுது இது' என்று சுக்கிரீவன்
கூறிய சுருக்கமான விடை 'சுருங்கச்சொல்லல்' எனும் அழகைச்சார்ந்தது.  54