3840. | 'என்று,தானும், ''அவ் வழி இரும் பிலம் சென்று, முன்னவன் - தேடுவேன்; அவற் கொன்றுளான்தனைக் கொல்வன்; அன்று எனின், பொன்றுவேன்'' எனா, புகுதல் மேயினான், |
என்று - என்று சொல்லி; தானும் - சுக்கிரீவனும்; அவ்வழி - வாலி சென்ற அவ்வழியே; இரும்பிலம் சென்று - அநதப் பெரிய பிலத்தினுள் சென்று; முன்னவன் தேடுவேன் - வாலியாம் என் தமையனைத் தேடிப் பார்ப்பேன்; அவற் கொன்றுளான் தனை - (அவன் இறந்து போயிருந்தால்) அவனைக் கொன்றவனாகிய மாயாவியை; கொல்வன் - (போர்செய்து) கொல்வேன்; அன்று எனின் - கொல்ல இயலவில்லை எனின்; பொன்றுவேன்- (போரில்) இறப்பேன்; எனா - என்று கூறி; புகுதல் மேயினான் - அப்பிலத்தில் நுழையப் புகுந்தான். முன்னவன் என்றது வாலியை. வாலி சென்ற பிலத்தினுள் புகுந்து வாலியைத் தேடுவது, அசுரன் வாலியைக் கொன்றிருப்பின் அவனைக் கொல்வது, அது இயலாவிடின் மடிவது எனச் சுக்கிரீவன் தன் மனத்துணிவை வெளிப்படுத்தினான். பிலத்தினுள் நுழைய மேயது வாலிமாட்டு அவன் கொண்டுள்ள அன்பையும் எடுத்துக் காட்டியது. அவற் கொன்றுளான் என உயர்திணை ஈறு இரண்டாம் வேற்றுமைத் தொகையாதலின் விகாரம் உற்றது. 55 |