3841.'தடுத்து, வல்லவர் தணிவு
     செய்து, நோய்
கெடுத்து, மேலையோர்
     கிளத்து நீதியால்
அடுத்த காவலும்,
     அரிகள் ஆணையால்
கொடுத்ததுஉண்டு; இவன்
     கொண்டனன் கொலாம்?

     வல்லவர் - அறிவும் சொல்வன்மையும் உடைய அமைச்சர்கள்;
தடுத்து- சுக்கிரீவன் பிலத்தினுள் நுழையாதவாறு தடுத்து; தணிவு செய்து-
அவனைச் சமாதானப்படுத்தி; நோய் கெடுத்து - அவன் துயரமாகிய
நோயைப்போக்கி; மேலையோர் கிளத்து நீதியால் - முன்னையோர்
கூறியுள்ள நீதிமுறையைக் கொண்டு; அடுத்த காவலும் - அடுத்து வரத்தக்க
அரசாட்சியை; அரிகள் ஆணையால் - மற்ற வானரர்களின் கட்டளைப்படி;
கொடுத்தது உண்டு-
இவனுக்குக் கொடுத்தது உண்டு; இவன் கொண்டனன்
கொலாம் -
(ஆட்சியை) இவன் விரும்பித் தானாக கைக்கொண்டானோ?
(இல்லை).

     நோய் - அண்ணனுக்கு யாது ஆயிற்றோ என்ற கலக்கத்தால் ஏற்பட்ட
மனத்துயரம்; வல்லவர்களின் கட்டளையை மீற முடியாமல் சுக்கிரீவன் அரசை
ஏற்றுக்கொண்டானேயன்றி, அரசு பெறவேண்டும் என்ற வேட்கையால் அன்று
எனக் கூறிச் சுக்கிரீவனது தவறின்மையைத் தெளிவாகக் காட்டினான்.
சுக்கிரீவன் விரும்பி நாட்டைப் பெற்றதாக வாலி நினைத்து அவனைத்
துன்புறுத்தியதை எண்ணி, 'இவன் கொண்டனன் கொலாம்' என்றான்.  இவன்
கொண்டதில்லை என்பது கருத்தாகும்.                             56