3844. | 'ஒளித்தவன் உயிர்க் கள்ளை உண்டு, உளம் களித்த வாலியும், கடிதின் எய்தினான்; விளித்து நின்று, வேறு உரை பெறான்; ''இருந்து அளித்தவாறு நன்று, இளவலார்! '' எனா, |
ஒளித்தவன் - (பிலத்தில் புகுந்து) ஒளித்தவனாகிய மாயாவியின்; உயிர்க் கள்ளை உண்டு - உயிராகிய கள்ளை உண்டு; உளம் களித்த வாலியும் - மனம் களிப்படைந்த வாலியும்; கடிதின் எய்தினான் - விரைவாகப் பிலத்து வாயிலை அடைந்து; விளித்து நின்று - (வாயில் அடைபட்டிருந்ததால்) சுக்கிரீவனை அழைத்து நின்று; வேறு உரை பெறான்- மறுமொழி ஒன்றும் பெறாதவனாய்; இளவலார் - 'என் தம்பியார்; இருந்து - வாயிலில் இருந்து; அளித்தவாறு நன்று- காவல் செய்தவிதம் நன்று; எனா- என்று சொல்லி. . . . கள் உண்டார்க்குக் களிப்பை உண்டாக்குதல் போல மாயாவியைக் கொன்ற வெற்றியும் களிப்பைத் தந்ததால் மாயாவியின் உயிரைக் கள்ளாக உருவகித்தான். அந்தக் கள்ளை உண்டால் வாலியின் மனமும் போதையுற்றது. சுக்கிரீவனுடைய உண்மைநிலை அறியாது மயங்கி உணர்ந்தமைக்கு இக்களிப்பே காரணம் என்பதை உணர்த்தவே 'களித்த வாலியும்' என்றான். இளவலார் - பண்படியாகப் பிறந்த பெயர்; அல் - பெயர்விகுதி. இகழ்ச்சி பற்றிப் பலர்பாலாக வந்தது. 'நன்று' என்பதும் நன்றன்று என்ற குறிப்பையே உணர்த்தியது. 'செய்தி காவல் நீ சிறிது போழ்து' என்ற வாலியின் கட்டளைக்குப் பணிந்திருக்க வேண்டியவன், காவலை விட்டதோடு, வாயிலையும் அடைத்தது பொருந்தாத செயல் எனக்கருதியதால் 'இருந்து அளித்தவாறு நன்று' என இகழ்வுபடப் பேசினான்வாலி. 59 |