3846.'ஏறினான் அவன்;
     எவரும் அஞ்சுறச்
சீறினான்; நெடுஞ்
     சிகரம் எய்தினான்;
வேறுஇல், ஆதவன்
     புதல்வன், மெய்ம்மை ஆம்
ஆறினானும், வந்து
     அடி வணங்கினான்.

     அவன் - வாலி; ஏறினான் - (பிலத்தினின்று) ஏறியவனாய்; எவரும்
அஞ்சுற -
எல்லோரும் அஞ்சும்படி; சீறினான் - கோபத்தால் சீறிக்கொண்டு;
நெடுஞ்சிகரம் எய்தினான்
- பெரிய மலை உச்சியை அடைந்தான்; வேறு
இல் -
மனத்தில் வேறுபாடு இல்லாத; ஆதவன் புதல்வன் - சூரியன்
மைந்தனும்; மெய்ம்மை ஆம் ஆறினானும் - உண்மை நெறியில்
நடப்பவனுமான சுக்கிரீவன்; வந்து அடிவணங்கி னான் - (தமையன்)
முன்வந்து அவன் பாதங்களில் வணங்கினான்.

     வாலி வேகத்தோடு மலைகளைத் தள்ளிச் சினத்தொடு கிட்கிந்தையை
அடைந்தபோது, மனத்தில் களங்கம் இல்லாத காரணத்தால் சுக்கிரீவன்
வாலியின் பாதங்களை வணங்கினான்.  வல்லார் கூறிய நெறிப்படியே
ஆட்சியை ஏற்றவன் ஆதலின் 'மெய்ம்மை ஆம் ஆறினான்' என்றார்.
சுக்கிரீவன் வாலிக்கு அஞ்சி ஒளிய வேண்டிய காரணம் இன்மையால்
எதிர்வந்து வணங்கினான்.

     வேறுஇல் - மனத்தில் வேறுபாடு இல்லாத; களங்கமற்ற என்பது கருத்து;
தான் வேறு, வாலி வேறு என்றிலாத ஒருமித்த மனமுடையவன் எனலும்
பொருந்தும்.                                                 61