3847. | 'வணங்கி, ''அண்ணல்! நின் வரவு இலாமையால், உணங்கி, உன் வழிப் படர உன்னவேற்கு, இணங்கர் இன்மையால், இறைவ! நும்முடைக் கணங்கள், 'காவல், உன் கடன்மை'' 'என்றனர். |
வணங்கி - அவ்வாறு வணங்கி; அண்ணல் - அண்ணலே; இறைவ - தலைவா! நின் வரவு இலாமையால் - நீண்டகாலம் உன் வருகை இல்லாததால்; உணங்கி - மனம் வருந்தி; உன் வழிப்படர - உன் பின்னர்ப் பிலத்துவழிச் செல்ல; உன்னுவேற்கு - கருதிய எனக்கு; நும்முடைக்கணங்கள் - நும் அமைச்சராகிய வானரக் கூட்டத்தார்; இணங்கர் இன்மையால்- சம்மதிக்காமையோடு; காவல் உன் கடன்மை - 'எங்களை ஆட்சி புரிந்து பாதுகாப்பது உனது கடமையாகும்'; என்றனர் - என்று கூறினர். இச்செய்யுளில் 'அண்ணல்' என்றது முதல் அடுத்த செய்யுளில் 'பொறாய்' என்னும் அளவும்,முன்னே வாலியினிடத்துச் சுக்கிரீவன் பேசியதை அனுமன் அறிந்து கூறியதாகும். தன்னினும் முன்னவனாதலின் 'அண்ணல்' என்றும், யாவர்க்கும் அரசனாதலின் 'இறைவ' என்றும் சுக்கிரீவன் விளித்தான். சுக்கிரீவன் நேர்மையான வழியில் செல்பவனாதலின், வாலி கேட்பதற்கு முன்னரே தன்மீது குற்றம் இல்லை என்பதை உணர்த்துதற்கு நடந்த நிகழ்ச்சிகளை உள்ளவாறு வாலியிடம் கூறலாயினன். வாலிக்கு அமைச்சராய் இருந்தோர் கூறியதால் அரசேற்க நேர்ந்தது என்பதால் 'நும்முடைக் கணங்கள்' என்றான். தான் உண்மையில் வாலி சென்ற வழியிலே செல்ல நினைத்ததை 'உன் வழிப் படர உன்னுவேற்கு' என்ற தொடரால் உணர்த்தினான். இணங்கர் - இணங்கு என்னும் குற்றியலுகரம் 'அர்' என்னும் ஈறுபெற்றுப் போலியாயிற்று. இறைவ நும்முடை - ஒருமை பன்மை மயக்கம்; மரியாதை பற்றி வந்ததால் வழுவமைதி. 62 |