3849.'அடல் கடந்த தோள் அவனை அஞ்சி, வெங்
குடல் கலங்கி, எம் குலம் ஒடுங்க, முன்
கடல் கடைந்த அக் கரதலங்களால்,
உடல் கடைந்தனன்; இவன் உலைந்தனன்.

     அடல் கடந்த தோள் - பகைவரின் வலிமையைப் போரில் கடந்து
வெற்றிபெற்ற தோள்களை உடைய; அவனை அஞ்சி - வாலிக்குப் பயந்து;
வெங்டல் கலங்கி
- கொடிய குடல் கலங்கி; எம் குலம் ஒடுங்க - எம்
வானர இனம் முழுமையும் அஞ்சி ஒடுங்கிநிற்க; முன் கடல் கடைந்த-
முன்பு திருப்பாற்கடலைக் கடைந்த; அக்கரதலங்
களால்- அந்தக் கைகளால்;
உடல் கடைந்தனன் - (சுக்கிரீவனது) உடலைத் தாக்கிக் கலக்கினான்
(வாலி); இவன் உலைந்தனன் - சுக்கிரீவன் பெரிதும் வருந்தினான்.

     வாலியின் சினத்திற்குக் குரக்கினம் முழுவதும் குடல் கலங்கி அஞ்சி
நடுங்கின.  பாற்கடலைக் கடைந்த வாலியின் கைகளுக்குச் சுக்கிரீவன்
உடம்பைக் கலக்குதல் எளிது.  ஆதலின் 'கடல் கடைந்த அக்கரதலங்களால்
உடல் கடைந்தனன்' என்றான்.  உடல் கடைதல் - உடம்பைத் தாக்கி
உறுப்புகள் கலங்குமாறு செய்தல்.  கொடுமையான வார்த்தைகளைப்
பேசியதோடு வாலி சுக்கிரீவனைத் தாக்கவும் செய்தான் என அவன்
கொடுமையை இராமனுக்கு அனுமன் உணருமாறு கூறினான்.  உடல் கடைதல்;
இதன்கண் அமைந்த (வினைப்) படிமம்கருதத்தக்கது.               64