3850.'பற்றி, அஞ்சலன் பழியை - வெஞ் சினம்
முற்றி நின்ற, தன் முரண் வலிக் கையால்,
எற்றுவான் எடுத்து எழுதலும், பிழைத்து,
அற்றம் ஒன்று பெற்ற, இவன், அகன்றனன்.

     பற்றி - வாலி சுக்கிரீவனைப் பிடித்துக் கொண்டு; பழியை அஞ்சலன் -
(தம்பியை வருத்துவதால் ஏற்படும்) பழிக்க அஞ்சாதவனாய்; வெஞ்சினம்
முற்றிநின்ற -
கொடிய கோபம் மிக்கு நின்ற; தன் முரண் வலிக்கையால் -
தனது மிக்க வலிமையுடைய கையால்; எற்றுவான் - மோதுவதற்கு; எடுத்து
எழுதலும் -
உயரத் தூக்கி எழுந்த அளவில்; அற்றம் ஒன்று பெற்று -
அவன் சோர்ந்திருக்கும் சமயம் ஒன்று பெற்று; இவன் பிழைத்து - இந்தச்
சுக்கிரீவன் தப்பிப்பிழைத்து; அகன்றனன் - அவ்விடம் விட்டு அகன்று
ஓடினான்.

     வாலி, தன்னைப் பழிப்பரே என்ற எண்ணம் சிறிதுமின்றித் தன் தம்பியை
மோதிக் கொல்ல, உயரே எடுத்த அளவில் சுக்கிரீவன் வாலி சிறிது
அயர்ந்திருந்த சமயம் நோக்கித் தப்பி ஓடி வந்துவிட்டான் என்பதாம்.  முரண்
வலி - ஒரு பொருட்பன்மொழி.  மிக்க வலிமை.  சுக்கிரீவனின் அச்சத்தைப்
பிழைத்தால் போதுமென ஒடி அகன்ற நிலை உணர்த்தும்.  பழிக்கு அஞ்சாத
வாலியின் கொடுமை உணர்த்தப்பட்டது.                            65