வாலிக்கு அஞ்சிய, சுக்கிரீவன் இரலை மலையில் வாழ்தல் 3851. | 'எந்தை! மற்று அவன் எயிறு அதுக்குமேல், அந்தகற்கும் ஓர் அரணம் இல்லையால்; இந்த வெற்பின் வந்து இவன் இருந்தனன் - முந்தை உற்றது ஓர் சாபம் உண்மையால். |
எந்தை - எம் ஐயனே! அவன் - அவ்வாலி; எயிறு அதுக்குமேல் - தன் பற்களைக் கடித்துக் கோபிப்பானாயின்; அந்தகற்கும் - யமனுக்கும்; ஓர் அரணம் - (பிழைத்துவாழ) பாதுகாப்பான ஓர் இடம்; இல்லை - இல்லை; முந்தை உற்றது - முன்னே (மதங்கமுனிவரால்) அடைந்ததாகிய; ஓர் சாபம் உண்மையால் - ஒரு சாபம் உள்ளதாதலின்; இந்த வெற்பின் வந்து - இந்த மலையில் வந்து; இவன் இருந்தனன் - சுக்கிரீவன் இருப்பானாயினன். வாலியின் சினத்திற்கு இலக்கானவர் யாவரேயாயினும் தப்பிப் பிழைப்பதற்கு உரிய இடமில்லை. எல்லா உயிர்களையும் கவரும் யமனுக்கும் பிழைக்க இயலாது என்பதால் வாலியின் வலிமை உணர்த்தப்பட்டது. அந்தகற்கும் - உம்மை, உயர்வு சிறப்பும்மை. எயிறு அதுக்குதல் - கோபக்குறியை உணர்த்தும் மெய்ப்பாடு. காரியம் காரணத்தின் மேல் நின்றது. வாலி, மதங்க முனிவரால் பெற்ற சாபத்தில் இம்மலைப் பகுதிக்கு வரஇயலாது. அதனால் சுக்கிரீவன் இம்மலையை அரணாகக் கொண்டு இதுகாறும் உயிர் பிழைத்திருந்தான் என்பதை உணர்த்தினான் அனுமன். வாலிக்கு மதங்க முனிவர் இட்ட சாபத்தைத் துந்துபிப் படலத்தால் அறியலாம். அந்தகன் - உயிர்கட்கு அழிவைச் செய்பவன்;யமன். 66 |