3852. | 'உருமை என்று இவற்கு உரிய தாரம் ஆம் அரு மருந்தையும், அவன் விரும்பினான்; இருமையும் துறந்து, இவன் இருந்தனன்; கருமம் இங்கு இது; எம் கடவுள்!' என்றனன். |
எம் கடவுள் - எம் தெய்வமே! உருமை என்று - உருமை என்று பெயர்பெற்று; இவற்கு உரிய - இச்சுக்கிரீவனுக்கு உரிய; தாரம் ஆம் - மனைவியாய் இருந்த; அருமருந்தையும்- கிடைத்தற்கரிய தேவாமிர்தம் போன்றவளையும்; அவன் - விரும்பினான் - அவ்வாலி விரும்பிக் கவர்ந்து கொண்டான்; இவன் - சுக்கிரீவன்; இருமையும் துறந்து- அரசச் செல்வத்தையும் மனைவியையும் இழந்து; இருந்தனன் - இம்மலையில் இருந்தான்; இங்கு இது கருமம் - இங்குக் கூறிய இதுவே நடந்த செய்தியாகும்; என்றனன் - என்று அனுமன் உரைத்தான். உருமை - சுக்கிரீவன் மனைவி. வாலி சுக்கிரீவர்களுக்கு மாமனும், தேவகுருவாகிய பிரகஸ்பதியின் மகனுமான தாரன் என்னும் வானர வீரனின் மகள். ருமை என்னும் வடசொல் தமிழில் உருமை ஆயது. அருமருந்தையும் - உம்மை உயர்வு சிறப்பொடு இறந்தது தழுவிய எச்சப்பொருளும் அமைந்தது. வாலி தனக்குரிய ஆட்சியை எடுத்துக் கொண்டதோடு, சுக்கிரீவனுக்கே உரிய மனைவியையும் கவர்ந்தான் என வாலியின் கொடுமை கூறப்பட்டது. அருமருந்து - கிடைத்தற்கரிய தேவாமிர்தம். உவமை ஆகுபெயராய் உருமையைக் குறித்தது. இருமை - அரசாட்சியையும் இல்லற வாழ்வையும் குறிக்கும். இருமையும் - உம்மை முற்றும்மை 'பூவையைப் பிரிந்துளாய் கொலோ' (3820) என இராமன் வினவியதற்கு விடையாக 'ஒன்று யான் உனக்கு உரைப்பது உண்டு' (3821) எனக் கூறத் தொடங்கிய செய்திகள் இந்தப் பாடலொடு முடிகின்றமையின் 'கருமம் இங்கு இது' என உரைத்தான். வாலி சுக்கிரீவன் மனைவியைக் கவர்ந்த செய்தியை 'அருமை உம்பிதன் ஆரூயிர்த் தேவியைப் பெருமை நீங்கினை' (4043) என்ற அடியும் உணர்த்தும். 67 |