இராமன் சினந்து, வாலியைக் கொல்வதாகச் சூளுரைத்தல்

கலித்துறை

3853. பொய் இலாதவன் வரன்முறை
     இம் மொழி புகல,
ஐயன், ஆயிரம் பெயருடை
     அமரர்க்கும் அமரன்,
வையம் நுங்கிய வாய் இதழ்
     துடித்தது; மலர்க் கண் -
செய்ய தாமரை, ஆம்பல் அம்
     போது எனச் சிவந்த.

     பொய் இலாதவன் - பொய் கூறுதலை அறியாத அனுமன்; வரன்
முறை -
கூறவேண்டிய முறைப்படி; இம்மொழி புகல - சுக்கிரீவனைப் பற்றிய
செய்திகளைக் கூற; ஐயன் - தலைவனும்; ஆயிரம் பெயருடை- ஆயிரம்
திருநாமங்களை உடைய; அமரர்க்கும் அமரன் - தேவர்களுக்கு எல்லாம்
மேம்பட்ட தேவனுமான இராமபிரானின்; வையம் நுங்கிய - (முன்பு பிரளய
காலத்தில்) உலகம் முழுவதையும் விழுங்கிய; வாய் இதழ் துடித்தது - வாயின்
உதடுகள் கோபத்தால் துடித்தன; கண்கள் - அவனது கண்களாகிய; செய்ய
தாமரை மலர்
- சிவந்த தாமரை மலர்கள்; ஆம்பல் அம்போது என -
செவ்வாம்பல் மலர் போல; சிவந்த- சிவந்தன.

     வாலி சுக்கிரீவனின் மனைவியைக் கவர்ந்த செய்தியினையும் மறைக்காது
உரைத்தமையால் 'பொய் இலாதவன்' என்றார்.  'மெய்ம்மை பூண்டான்' (4801)
என்று பின்னரும் அனுமன் கட்டப்படுவான்.  அறத்திற்கு மாறாக வாலி நடந்து
கொண்டான் என அறிந்ததும் தாமரை மலர்க்கண்கள் மேலும் சிவந்ததால்
'ஆம்பல் போது எனச்சிவந்த' என்றார்.  தாமரை மலரின் செம்மையினும்
செவ்வாம்பல் மலர் செம்மை மிக்கது என அறிய முடிகிறது.

     வையம் நுங்கிய - பிரளய காலத்தில் எல்லா உலகங்களுக்கும்
அழிவில்லாதவாறு திருமால் தன் வயிற்றில் உலகங்களை வைத்துக் காத்தார்
என்பது புராணக்கதை.  இராமபிரான் வடிவு கொண்ட திருமால் ஆயிரம்
பெயருடையவன்; 'ஆயிரம் நாமச் சிங்கம்' (1258) என முன்னும் கூறினார்.
அமரர்க்கு அமரனாக இராமபிரான் விளங்கியதை 'தேவதேவனைத்
தென்னிலங்கை எரியெழச் செற்ற வில்லியை' (திருவாய்மொழி.3.6-2) என்று
நம்மாழ்வாரும் போற்றுவார்.  திருமால் வையம் நுங்கியதை இராமபிரான் மேல்
ஏற்றிக்கூறியுள்ளார்.

     இதனை 'அண்டமும் முற்றும் அகண்டமும் மேல்நாள் உண்டவன் ஆம்'
(418) என முன்னரும் குறித்தார்.  'உலகுண்ட ஒருவா' (பெரியதிருமொழி -
7. 7. 1) ''மண்ணும் மலையும் மறிகடலும் மாருதமும், விண்ணும் விழுங்கியது
மெய்யென்பர்'' (முதல்திருவந்தாதி - 10) என்ற அடிகள் ஈண்டு ஒப்புநோக்கத்
தக்கன.  ஆம்பல் அம் போது - அம் சாரியை.

     'ஆயிரம் பெயருடை அமரன்' எனவும் 'அமரர்க்கு அமரன்' எனவும்
கூட்டுக.  அனுமன் கூறியதைக் கேட்டதும் இராமனிடம் நிகழ்ந்த
மெய்ப்பாடுகள் இச் செய்யுளில் அமைந்துள்ளன.  இராமனின் ஆற்றலும்
வெகுளியின் வேகமும் பாடலில் புலப்படுகின்றன.                     68