3854. | ஈரம் நீங்கிய சிற்றவை சொற்றனள் என்ன, ஆரம் வீங்கு தோள் தம்பிக்குத் தன் அரசு உரிமைப் பாரம் ஈந்தவன், 'பரிவு இலன், ஒருவன் தன் இளையோன் தாரம் வௌவினன்' என்ற சொல் தரிக்குமாறு உளதோ? |
ஈரம் நீங்கிய - அன்பு நீக்கிய; சிற்றவை - சிறிய தாயாகிய கைகேயி; சொற்றனள் என்ன - சொன்னாள் என்று; ஆரம் வீங்கு தோள் - முத்துமாலை அணிந்த பருத்த தோள்களை உடைய; தம்பிக்கு - தம்பியாகிய பரதனுக்கு; தன் அரசு உரிமைப் பாரம் - தனக்கே உரித்தான அரசபாரத்தை; ஈந்தவன் - அளித்தவனான இராமன்; பரிவு இலன் ஒருவன் - ''அன்பில்லாத ஒருவன்; தன் இளையோன் தாரம் - தன் தம்பியின் மனைவியை; வௌவினன்- கவர்ந்து கொண்டான்; என்ற சொல் - என்ற வார்த்தையை; தரிக்குமாறு உளதோ - (கேட்டுப்)பொறுத்திருக்கும் தன்மை உண்டாகுமோ? (ஆகாது). இராமன் மாட்டு இயல்பாக அன்பு கொண்ட கைகேயி கூனியின் சூழ்ச்சியால் மாறியதால் 'ஈரம் நீங்கிய சிற்றவை' என்றார். ஆட்சியுரிமை மூத்தவனான இராமனுக்கே உரித்து ஆதலின் 'தன் அரசுரிமை' எனப்பட்டது. இச்செய்யுளால் தம்பி மாட்டு அன்பில்லாது, அவன் தாரத்தையும் கவர்ந்த கொடிய செயலே மனைவியை இழந்த இராமன் வாலிபால் கொண்ட பகைமைக்கு முதன்மைக் காரணமாய் முன்னின்றது என்பதாம். இப்பாடல்கவிக்கூற்று. 69 |