3858.'உன்னினேன், உன்தன் உள்ளத்தின்
     உள்ளதை, உரவோய்!
''அன்ன வாலியைக் காலனுக்கு
     அளிப்பது ஓர் ஆற்றல்
இன்ன வீரர்பால் இல்லை'' என்று
     அயிர்த்தனை; இனி, யான்
சொன்ன கேட்டு, அவை கடைப்பிடிப்பாய்'
     எனச் சொன்னான்.

     உரவோய் - வலிமை உடையவனே! உன்தன் உள்ளத்தின் - உன்
மனத்தில்; உள்ளதை - உள்ள கருத்தை; உன்னினேன் - (யான்) ஊகித்து
அறிந்து கொண்டேன்; அன்ன வாலியை - அத்தகைய வலிமை வாய்ந்த
வாலியை; காலனுக்கு அளிப்பது ஓர் ஆற்றல் - யமனுக்குக்
கொடுக்கும்படியான ஒப்பற்ற வலிமை; இன்ன வீரர்பால் இல்லை - இந்த
வீரர்களிடத்தில் இல்லை; என்று அயிர்த்தனை - என்று ஐயம் கொண்டாய்;
இனி யான் சொன்ன கேட்டு
- இனி யான் சொல்லும் வார்த்தைகளைக்
கேட்டு; அவை கடைப்பிடிப்பாய் - அவற்றை உறுதியாகக் கொள்வாய்;
எனச் சொன்னான் -
என்று சொல்வானாயினன்.

     உற்றது கொண்டு மேல்வந்து உறுபொருள் உணரவல்ல அனுமன் தன்
அறிவால் சுக்கிரீவன் மனத்தில் கொண்ட ஐயத்தை உணர்ந்துகொண்டான்.
காலனுக்கு அளிப்பது - கொல்வது என்னும் பொருளைத் தருவது.  அன்ன
வாலி என்றது.  எதிர்த்தார் வலிமையில் பாதியைத் தான் பெறுதற்குரிய வரம்
பெற்ற வாலி  என அவன் பெருமையைக் கூறியதாகும்.  இன்ன வீரர் - இங்கு
வந்துள்ள இராமலக்குவரைக் குறிக்கும்.

     யான் சொன்ன என்பதில் சொன்ன காலவழுவமைதி.             73