3860. 'செறுக்கும் வன்திறல் திரிபுரம்
     தீ எழச் சினவிக்
கறுக்கும், வெஞ் சினக் காலன்தன்
     காலமும் காலால்
அறுக்கும் புங்கவன் ஆண்ட பேர்
     ஆடகத் தனி வில்
இறுக்கும் தன்மை, அம்
     மாயவற்கு அன்றியும் எளிதோ?

     செறுக்கும் வன்திறல் - யாவரையும் வருத்துகின்ற மிக்க வலி மையை
உடைய; திரிபுரம் - முப்புரங்களும்; தீ எழச் சினவி - நெருப்புப் பற்றி
எரியும்படி சினங்கொண்டு; கறுக்கும் வெஞ்சினக் காலன் தன் - கோபித்து
(மார்க்கண்டேயன் மீது) கொடிய சினங்கொண்ட யமனுடைய; காலமும் -
ஆயுள் காலத்தையும்; காலால் அறுக்கும் - காலினால் உதைத்து
அழித்துவிட்ட; புங்கவன் - மேலோனான சிவபிரான்; ஆண்ட - கையாண்ட;
பேர் ஆடகத்தனி வில் -
பெரிய பொன்மயமான ஒப்பற்ற வில்லை;
இறுக்கும் தன்மை -
முறிக்கின்ற செயல்; அம்மாயவற்கு அன்றியும் -
அத்திருமாலுக்கு அல்லாது; எளிதோ - பிறர்க்கு எளிதாமோ? (ஆகாது).

     திரிபுரம் அழித்து, காலனையும் உதைத்த சிவபிரான் பற்றிய வில் என
அவ்வில்லின் வலிமையும் பெருமையும் கூறி, அதனை வளைத்தவன் என
இராமன் பெருமை கூறியவாறு.  சீதையை மணக்க இராமன் வளைத்த வில்
சிவன் வில்.  திரிபுரம் என்னும் கோட்டை அமைந்த மூன்று நகரங்களின்
அழிக்கும் வலிமை தெரிய 'செறுக்கும் வன்திறல் திரிபுரம்' என்றான்.
மார்க்கண்டேயனைப் பற்றிய யமனது சினம் தோன்றக் 'கறுக்கும் வெஞ்சினக்
காலன்' என்றான். சிவபிரான் அவனை அழித்த எளிமை தோன்றக் 'காலால்
அறுக்கும்' என உணர்த்தினான்.                                75