இராமனின் ஆற்றலைக் கண்டறிய அனுமன் உரைத்த உபாயம்

3863. 'பிறிதும், அன்னவன் பெரு
     வலி ஆற்றலை, பெரியோய்!
அறிதி என்னின், உண்டு உபாயமும்;
     அஃது அரு மரங்கள்
நெறியில் நின்றன ஏழில், ஒன்று
     உருவ, இந் நெடியோன்
பொறி கொள் வெஞ் சரம் போவது
     காண்!' எனப் புகன்றான்.

     பெரியோய் - சுக்கிரீவப் பெரியோனே! பிறிதும்- மற்றும்; அன்னவன்
பெருவலி ஆற்றலை -
அந்த இராமனுடைய பெரிய வலிமைச் சிறப்பை;
அறிதி என்னின் -
அறிய விரும்புவாயானால்; உபாயமும் உண்டு - அதற்கு
ஒரு வழி உள்ளது.; அஃது - அவ் உபாயமாவது; நெறியில் நின்றன - நாம்
போகும் வழியில் நிற்பனவான; அருமரங்கள் ஏழில் - எய்துதற்கரிய
மராமரங்கள் ஏழிற்; ஒன்று உருவ - ஒன்றைத் துளைக்கும்படி;
இந்நெடியோன் -
இந்த நெடியோனாகிய இராமனது; பொறி கொள்
வெஞ்சரம் -
நெருப்புப்பொறி கொண்ட கொடிய அம்பொன்று; போவது
காண் -
செல்வதே ஆகும்; எனப் புகன்றான் - என்று சொன்னான்.

     மராமரங்கள் ஏழில் ஏதேனும் ஒரு மரத்தை ஊடுருவும் ஆற்றல் இராமன்
அம்புக்கு உண்டாயின.  அவ்வம்பு வாலியின் மார்பைத் துளைக்கும் ஆற்றலை
உடையது என்பதைத் தெளியலாம் என்று சுக்கிரீவன் தெளியுமாறு சிறந்த
உபாயத்தை அனுமன் உரைத்தனன்.  வலியாற்றல் - ஒரு பொருட்பன்மொழி;
                                                             78