3866. மறு இலான் அது கூறலும்,
     வானவர்க்கு இறைவன்,
முறுவல் செய்து, அவன்
     முன்னிய முயற்சியை உன்னி,
எறுழ் வலித் தடந் தோள்களால்
     சிலையை நாண் ஏற்றி,
அறிவினால் அளப்ப அரியவற்று
     அருகு சென்று, அணைந்தான்.

     மறுஇலான் - (மனத்தில்) குற்றம் இல்லாதவனாம் சுக்கிரீவன்; அது
கூறலும் -
அவ்வார்த்தையைச் சொன்னதும்; வானவர்க்கு இறைவன் -
தேவர்களுக்கெல்லாம் தலைவனாகிய இராமபிரான்; அவன் முன்னிய
முயற்சியை உன்னி -
சுக்கிரீவன் எண்ணிய காரியத்தை அறிந்து கொண்டு;
முறுவல் செய்து -
புன் முறுவல் செய்து; எறுழ் வலித் தடந் தோள்களால்
- மிக்க வலிமையுடைய பெரிய கைகளால்; சிலையை நாண் ஏற்றி - வில்லை
எடுத்து நாண் ஏற்றி; அறிவினால் அளப்பு அரியவற்று - அறிவினால்
அளவிட்டு அறிய முடியாத அம்மரங்களின்; அருகு சென்று - அருகில்
சென்று; அணைந்தான் - சேர்ந்தான்.

     சுக்கிரீவன் தன் உள்ளத்தில் ஏற்பட்ட ஐயத்தை மறைக்காமல்
வெளியிட்டமையால் 'மறுவிலான்' எனச் சிறப்பிக்கப்பட்டான்.  இராமன்
தேவர்களுக்குத் தலைவனாகிய திருமாலின் அவதாரம் ஆதலின் 'வானவர்க்கு
இறைவன்' என்றார்.  இராமனைத் 'தெய்வநாயகன்' (6994) என அங்கதனும்,
''தேவதேவனைத் தென்னிலங்கை எரியெழச் செற்றவில்லியை'' (திருவாய்மொழி
- 3-6-2) என நம்மாழ்வாரும் கூறியமை காண்க.  இராமன் வலிமைக்கு
மராமரம் துளைத்தல் மிக எளிய காரியமாதலின், சுக்கிரீவன் மனத்தில்
அச்சத்தால் ஏற்பட்ட ஐயத்தை உய்த்துணர்ந்து இராமன் முறுவல் செய்தான்.
எறுழ் - வலிமை; எறுழ் வலி - ஒரு பொருட்பன்மொழி.  அரியவற்று -
'அற்று' - சாரியை.  மராமரங்களின் உயர்வும், பருமையும், பரப்பும் மக்கள்
அறிவால் அளக்க முடியாதன ஆதலின் 'அறிவினால் அளப்பரியவற்று'
என்றார்.                                                      2