மராமரங்கள் நின்ற காட்சி 3867. | ஊழி பேரினும் பேர்வில; உலகங்கள் உலைந்து தாழும் காலத்தும், தாழ்வில; தயங்கு பேர் இருள் சூழ் ஆழி மா நிலம் தாங்கிய அருங் குலக் கிரிகள் ஏழும், ஆண்டுச் சென்று ஒரு வழி நின்றென, இயைந்த; |
ஊழி பேரினும் - (அம் மராமரங்கள்) யுகங்கள் மாறினாலும்; பேர்வு இல - தம் நிலைமாறுதல் இல்லாதவை; உலகங்கள் - எல்லா உலகங்களும்; உலைந்து தாழும் காலத்தும்- அழிந்து போகும் காலத்திலும்; தாழ்வு இல- விழுந்து தாழ்வடைவன அல்ல; தயங்கு பேர் இருள் சூழ் - திகைத்தற்குக் காரணமான மிக்க இருளினால் சூழப்பெற்ற; ஆழிமா நிலம் - கடல் சூழ்ந்த பெரிய பூமியை; தாங்கிய அருங் குலக் கிரிகள் ஏழும்- தாங்குகின்ற அரிய குல மலைகள் ஏழும்; ஆண்டுச் சென்று - அவ்விடத்தில் வந்து; ஒரு வழி நின்றென - ஒரு சேர நின்றது போல; இயைந்த - அமைந்திருந்தன. அழியாது நிலைத்து நிற்க வல்லன; பெருந்தோற்றமும் வன்மையும் கொண்டன என மராமரங்கள் ஏழின் சிறப்புகள் கூறப்பட்டன. முன்னிரண்டடிகள் உயர்வு நவிற்சி அணி பொருந்தியது. பற்பல இடங்களில் உள்ள ஏழு மலைகளும் ஒரிடத்தில் வந்து நின்றன என்று சொல்லத்தக்க வகையில் மரங்கள் விளங்கியதால் பெருங்கிரிகள் ஏழும் ஆண்டுச் சென்று ஒரு வழி நின்றென' என்றார். ஏழுமலைகளும் ஓரிடத்தில் நிற்றல் இல்லையாதலின் பின்னிரண்டடிகள் இல்பொருள் உவமையணி அமைந்தது. கிரிகள் ஏழு - கைலை, இமயம், மந்தரம், விந்தம், நிடதம், ஏமகூடம், கந்தமாதநம் என்பன. மலைகள் பூமிக்கு மேலும் கீழும் பொருந்தித் தாங்குவதால், 'மாநிலம் தாங்கிய அருங்குலக்கிரிகள்' எனப்பட்டன. ஊழி பேரினும் தாழும் காலத்தும் - உம்மை உயர்வு சிறப்பு; ஏழும் - முற்றும்மை. 3 |