3868. | கலை கொண்டு ஓங்கிய மதியமும், கதிரவன்தானும், 'தலைகண்டு ஓடுதற்கு அருந் தவம் தொடங்குறும் சாரல் மலை கண்டோம்' என்பது அல்லது, மலர்மிசை அயற்கும், இலை கண்டோம்' என, தெரிப்ப அருந் தரத்தன ஏழும்; |
ஏழும் - அம்மராமரங்கள் ஏழும்; கலை கொண்டு ஓங்கிய மதியமும் - பதினாறு கலைகளையும் கொண்டு வளர்ந்த சந்திரனும்; கதிரவன் தானும்- சூரியனும்; தலை கண்டு ஓடுதற்கு - தன் உச்சியைக் கண்டு தாண்டிச் செல்வதற்கு; அருந்தவம் தொடங்குறும் - அரிய தவத்தைச் செய்யத் தொடங்கி; மலை கண்டோம் - மலைச்சாரலைப் பார்த்தோம்; என்பது அல்லது - என்று சொல்வதே அல்லாமல்; மலர்மிசை அயற்கும்- தாமரை மலர் மேலிருக்கும் பிரமனுக்கும்; இலை கண்டோம் - இம்மரங்களின் இலைகளைக் கண்டுவிட்டோம்; எனத் தெரிப்பு அரும் - என்று சொல்லுதற்கரிய; தரத்தன - சிறப்புத் தன்மையை உடையன. சந்திர சூரியர்கள் வானில் இம்மரங்களின் உச்சியைக் கடந்து செல்ல முடியாமல், அவ்வாறு கடந்து செல்ல அருந்தவம் செய்வர். அம்மரங்களைக் கண்ட நான்முகனும் 'ஒரு மலைச்சாரலைக் கண்டேன்' என்று சொல்வதல்லது 'அம் மரங்களின் உச்சியில் உள்ள இலைகளைப் பார்த்தேன்' என்று சொல்ல முடியாத உயரம் உடையன அம்மரங்கள் என்பது பொருளாகும். அதனால் சூரிய, சந்திரர் தம் இயக்கம் தடைப்பட்டு அம்மரங்களின் அடிப்பகுதியிடைத் தங்கி விட, அதைக் காணும் நான்முகன் அப்பகுதியைச் சூரிய, சந்திரர் தவம்புரியத் தங்குமிடம் என்று கருதினான். இச்செய்யுள் உயர்வு நவிற்சி அணியின் பாற்படும். 4 |