3872.நாற்றம் மல்கு போது, அடை,
     கனி, காய், முதல் நானா
வீற்று, மண்தலத்து யாவையும்
     வீழ்கில, யாண்டும்
காற்று அலம்பினும்; கலி
     நெடு வானிடைக் கலந்த
ஆற்றின் வீழ்ந்து போய், அலை
     கடல் பாய்தரும் இயல்ப;

     காற்று அலம்பினும் - காற்று அசைத்தாலும்; நாற்றம் மல்கு போது-
நறுமணம் மிக்க மலர்களும்; அடை கனி காய் முதல் - இலைகளும்,
பழங்களும், காய்களும் முதலிய; நானா வீற்று யாவையும் - பலவகைப்பட்ட
அனைத்தும்; மண் தலத்து - மண்ணுலகில்; யாண்டும் வீழ்கில -
எவ்விடத்திலும் விழாதனவாய்; கலி நெடு வானிடை- ஆரவாரத்தை உடைய
பெரிய வானுலகத்தில்; கலந்த - பொருந்திய; ஆற்றின் வீழ்ந்து போய் -
ஆகாய கங்கையில் விழுந்து (அதன் வழியாகச்)  சன்று; அலைகடல்
பாய்தரும் -
அலைகளை உடைய கடலில் சேர்கின்ற; இயல்ப- தன்மையை
உடையன.

     இதனால் அம்மரங்கள் ஆகாய கங்கையினும் உயர்ந்துள்ளன என்றவாறு;
உயர்வு நவிற்சி அணி.  நாற்றம் - இங்கு நறுமணம்; ஆறு - ஆகாய கங்கை.
'நறுமணம் மிக்க மலர், இலை, கனி, காய் முதலிய பல்வகைப்பட்ட அனைத்தும்
எக்காலத்தும் வெவ்வேறு மண்டலங்களில் வீழ்வன அல்ல; காற்றடித்து
வீழ்ந்தாலும் ஆரவாரமுடைய ஆகாயத்தில்  பொருந்திய ஆகாய கங்கையில்
விழுந்து கடலைச் சேர்வன' என்றும் இப்பாடலுக்கு விளக்கம்கூறுவர்.     8