3873. | அடியினால் உலகு அளந்தவன் அண்டத்துக்கு அப்பால் முடியின்மேல் சென்ற முடியன ஆதலின், முடியா நெடிய மால் எனும் நிலையன; நீரிடைக் கிடந்த படியின்மேல் நின்ற மேரு மால் வரையினும், பரிய; |
அடியினால் - தன் திருவடியினால்; உலகு அளந்தவன் - உலகங் களை அளந்தவனான திருமாலின்; அண்டத்துக்கு அப்பால் - அண் டத்திற்கு அப்பால் உள்ள; முடியின் மேல் சென்ற - உச்சி முகட்டின் மேலாக வளர்ந்து சென்ற; முடியன ஆதலின் - உச்சியினை உடையன ஆதலால்; முடியா - அளவிட முடியாத; நெடிய மால் எனும் - (விக் கிரமாவதாரங் கொண்ட) நெடிய திருமால் என்று சொல்லத் தக்க; நிலையன- நிலைமையை உடையன. நீர் இடைக்கிடந்த - கடல் நீரில் கிடந்த - படியின் மேல் நின்ற- பூமியின் நடுவில் நிற்கின்ற; மேரு மால் வரையினும் - பெரிய மேருமலையைக் காட்டிலும்; பரிய - பருமையை உடையன. மரங்கள் திருமாலுக்குரிய உலகினையும் கடந்து வளர்ந்து இருந்தமையால், அவை திரிவிக்கிரமனாய் வளர்ந்த திருமாலை ஒத்து விளங்கின. திரிவிக்கிரமனின் பெருமையை 'படிவட்டத் தாமரை பண்டுலகம் நீரேற்று, அடிவட்டத்தால் அளப்ப நீண்ட - முடிவட்டம், ஆகாயம் ஊடறுத்து அண்டம் போய் நீண்டதே, மாகாயமாய் நின்ற மாற்கு' என்று பாடுவர் பேயாழ்வார் (மூன்றாந் திருவந்தாதி - 13) நீரிடைக் கிடந்தபடி - நீரிடத்தில் தோன்றிய பூமி என்பதன் பொருள். பூமியின் நடுவில் பொன்மயமாய் மேருமலை நிற்பதாகவும் சூரியன் உதயமும் மறைவும் அம்மலையால் ஏற்படுகின்றன என்றும் பௌராணிகர் உரைப்பர். அத்தகைய மேருமலையினும் பரிய எனக் கூறி மரங்களின் பருமை உணர்த்தப்பட்டது. 9 |