3875.சென்று திக்கினை அளந்தன,
     பணைகளின்; தேவர்,
'என்றும் நிற்கும்' என்று இசைப்பன;
     இரு சுடர் திரியும்
குன்றினுக்கு உயர்ந்து அகன்றன;
     ஒன்றினும் குறுகா;
ஒன்றினுக்கு ஒன்றின் இடை,
     நெடிது யோசனை உடைய.

     பணைகளின் - கிளைகளால்; சென்று - (அம்மரங்கள்) வளர்ந்து
போய்; திக்கினை அளந்தன - எல்லாத் திசைகளையும் அளந்தன; என்றும்
நிற்கும் என்று -
எக்காலத்தும் அழியாமல் நிற்பவை என்று; தேவர் -
தேவர்களால்; இசைப்பன - சொல்லத்தக்கன; இருசுடர் - சூரிய சந்திரர்;
திரியும் குன்றினுக்கு
- வலம் வரும் மேருமலையை விட; உயர்ந்து,
அகன்றன -
உயர்ந்தும், அகன்றும் விளங்கின; ஒன்றினும் குறுகா - ஒரு
வகையிலும் குறைவு படாதன; ஒன்றினுக்கு ஒன்றின் இடை - ஒரு
மரத்திற்கும் மற்றொரு மரத்திற்கும் இடையிலே; நெடிது யோசனை உடைய-
பல யோசனை தூரம் இடைவெளி உள்ளவை.

     உயர்ந்தும் பரந்தும் வளர்ந்த மரங்கள் நெருக்கமாக இன்றி இடைவெளி
விட்டு வளர்ந்திருக்கின்றன.  திக்கினை அளந்தன என்பதற்குத் திசைகளின்
எல்லை அளவும் பரந்துள்ளன என்பது பொருள்.  யோசனை ஓரெல்லை
அளவைக் குறிக்கும். நான்கு காததூரம் என்றுகூறுவர்.                11