3877.ஒக்க நின்றது, எவ் உலகமும்
     அங்கு அங்கே ஓசை;
பக்கம் நின்றவர்க்கு உற்றது
     பகர்வது எப்படியோ?
திக்கயங்களும் மயங்கின;
     திசைகளும் திகைத்த;
புக்கு, அயன் பதி சலிப்புற
     ஒலித்தது, அப் பொரு வில்.

     ஓசை - அந்நாண் ஒலியானது; எவ் உலகமும் - எல்லா
உலகங்களிலும்; அங்கு அங்கே - அவ்வவ் விடங்களிலே; ஒக்க நின்றது -
ஒரே தன்மைத்தாய்ப் போய் பரவி நின்றது; பக்கம் நின்றவர்க்கு - (என்றால்)
அருகில் நின்றவர்களுக்கு; உற்றது பகர்வது - ஏற்பட்ட நிலையைச்
சொல்வது; எப்படியோ - எவ்வாறோ? திக்கயங்களும் மயங்கின -
(அந்நாண் ஒலியால்) எட்டு திக்கு யானைகளும் மயக்கம் உற்றன; திசைகளும்
திகைத்த -
எல்லாத் திசைகளும் கலக்கம் அடைந்தன; அப்பொரு வில் -
பொருதற்குரிய அந்த வில்லின் நாணொலி; அயன்பதி சலிப்புற -
பிரமலோகம் அதிர்ச்சியடையும்படி; புக்கு ஒலித்தது - புகுந்து ஒலித்தது.

     இதனால் நாணொலியின் மிகுதியைத் தெரிவித்தவாறு. சேய்மையில்
உள்ள வெவ்வேறு உலகங்களில் ஒலித்த நாணொலி அவ்வவ்விடத்தில்
தோன்றியது போலப் பேரோசை பெற்றிருந்தது என்றால்,  அருகில்
நின்றவர்களுக்குக் கேட்ட ஓசையின் மிகுதி சொல்லுந்தரமன்று.  மேலும்
திக்கயங்களும் திசைகளும் கலங்க, அயன்பதியும் சலிப்புற ஒலித்தது என்றதால்
ஒலியின் மிகுதியை அறியலாம்.  எப்படியோ - ஓகாரம் எதிர்மறை;
எவ்வுலகமும் - உம்மை முற்று; திக்கயங்கள் - ஐராவதம், புண்டரீகம், வாமநம்,
குமுதம், அஞ்சநம், புஷ்பதந்தம், சார்வ பௌமம், சுப்ரதீகம் என்பன.  நாண்
ஒலியின் மிகுதியைக் குறித்ததால் தொடர்பு உயர்வு நவிற்சிஅணி.       13