3880. | ஏழு மாமரம் உருவி, கீழ் உலகம் என்று இசைக்கும் ஏழும் ஊடு புக்கு உருவி, பின் உடன் அடுத்து இயன்ற ஏழ் இலாமையான் மீண்டது, அவ் இராகவன் பகழி; ஏழு கண்டபின், உருவுமால்; ஒழிவது அன்று, இன்னும். |
அவ் இராகவன் பகழி- (அவ்வாறு தொடுக்கப்பட்ட) அந்த இராமனின் அம்பு; ஏழு மாமரம் உருவி - ஏழு பெரிய மராமரங்களைத் துளைத்துச் சென்று; கீழ் உலகம் என்று இசைக்கும் - கீழ் உலகம் என்று சொல்லப்படுகின்ற; ஏழும் ஊடு புக்கு உருவி - ஏழையும் நடுவே துளைத்துச் சென்று; பின் - பின்பு; உடன் அடுத்து இயன்ற - அவற்றைத் தொடர்ந்து பொருந்தியுள்ள; ஏழ் இலாமையால் - ஏழு என்னும் தொகை கொண்ட பொருள் இல்லாமையால்; மீண்டது - (அந்த அம்பு) திரும்பி வந்து விட்டது. இன்னும் - இன்னமும்; ஏழு கண்டபின் - ஏழென்னும் தொகையை உடைய பொருளைக் காணுமாயின்; உருவும் - துளைத்து விடும்; ஒழிவது அன்று- துளைக்காமல் விடுவதில்லை. இராமன் தொடுத்த அம்பு ஏழு மராமரங்களையும் துளைத்து, கீழ் உலகங்கள் ஏழையும் துளைத்துச் சென்றமையால் ஏழென்னும் எண்ணிக்கை கொண்ட பொருள்களையெல்லாம் அவன் அம்பு துளைக்கும் என்பது தெளிவாகிறது. கீழ் உலகங்கட்கு அப்பால் ஏழென்னும் எண்ணமைந்த பொருள்கள் இல்லாமையால் அம்பு திரும்பி வந்தது என்று காரணத்தைக் கற்பித்துக் கூறியதால் 'ஏதுத்தற்குறிப்பேற்ற அணியாம்'. மேலும் ஏழு என்னும் எண்ணிக்கைக்கு உரியது எதையேனும் கண்டால் இராமன் கணை ஊடுருவாது விடாது என்றது ஆன்மாக்களின் ஏழு பிறப்பைக் குறித்ததாகலாம். அவனைச் சரணடையும் பாகவதர்களின் ஏழு பிறப்பை நீக்கும் திறனுடையது பெருமான் கணை. இராமபிரான் கணையால் தாக்குண்டவர்கள் வீடு பேறடைந்த குறிப்புடையது இராம காதை. கீழுலகங்கள் ஏழாவன; அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதாளம் என்பன. ஏழ் இலாமையால், ஏழு கண்டபின் என்பதில் வரும் ஏழு - ஆகுபெயர். கண்ட பின் - பின் ஈற்று எதிர்கால வினையெச்சம்; இராமன் அம்பு மராமரங்களைத் துளைத்த செய்தியைப் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார், 'மாதவரும்பர் பெருமாள் அரங்கர் வலியுணரா தாதவன் மைந்தன் அயிர்த்த அந்நாளிலக் காயநெடும் பாதவ மேழும் உடனே நெடுங்கணை பட்டுருவப் பூதல மேழும் ஏழு பாதாலங்களும் புண்பட்டவே' (திருவரங்கத்து மாலை - 41) என்று பாடியுள்ளார். இராமன் மராமரங்களின் மீது தொடுத்த அம்பு ஸப்த ஜாதி என்பர். இராமன் அம்பின் வேகமும் குறி தவறாமையும் ஈண்டுப் புலப்படுகின்றன. சுக்கிரீவன் குறித்தது ஒரு மரம்; இராகவன் கணை துளைத்தது ஏழு மரம். 16 |