3881. | ஏழு வேலையும், உலகம் மேல் உயர்ந்தன ஏழும், ஏழு குன்றமும், இருடிகள் எழுவரும், புரவி ஏழும், மங்கையர் எழுவரும், நடுங்கினர் என்ப - 'ஏழு பெற்றதோ இக் கணைக்கு இலக்கம்?' என்று எண்ணி, |
ஏழு வேலையும்- ஏழு கடல்களும்; உயர்ந்தன மேல் உலகம் ஏழும்- மேலே உயர்ந்துள்ளனவான உலகங்கள் ஏழும்; ஏழு குன்றமும் - ஏழு குல மலைகளும்; இருடிகள் எழுவரும்- ஏழு முனிவர்களும்; புரவி ஏழும் - சூரியன் தேரை இழுத்துச் செல்லும் ஏழு குதிரைகளும்; மங்கையர் எழுவரும்- ஏழு கன்னியர்களும்; இக்கணைக்கு இலக்கம் - இந்த அம்பிற்குக் குறி; ஏழு பெற்றதோ - ஏழு என்னும் தொகைப் பொருள் அனைத்துமோ? என்று எண்ணி - என்று நினைத்து; நடுங்கினர் - அஞ்சி நடுங்கினர். ஏழு வேலை : உவர்நீர், கருப்பஞ்சாறு, மது, நெய், தயிர், பால், நன்னீர் இவற்றை உடைய கடல்கள்; மேல் ஏழு உலகம் : பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம் ஐநலோகம், மஹாலோகம், தபோலோகம், சத்தியலோகம் என்பன; ஏழு குன்றம் : கயிலை, இமயம், மந்தரம், விந்தம், நிடதம், ஹேமகூடம், கந்தமாதனம் என்பன. இருடிகள் எழுவர் - அத்திரி, பிருகு, குத்ஸவர், வசிட்டர், கௌதமர், காசியபர், ஆங்கிரஸர் எனப்படுவோர்; புரவி ஏழு - காயத்ரீ, உஷ்ணிக், அநுஷ்டுப், ப்ருஹதீ, பங்க்தி, த்ரிஷ்டுப், ஜகதி என்னும் பேத சந்தசுகள். மங்கையர் ஏழுவர் : பிராஹ்மி, மாகேச்வரி, கௌமாரி, நாராயணி, வாராகி, இந்திராணி, சாமுண்டி எனப்படுபவர். இப்பாடலில் அஃறிணையும் உயர்திணையும் கலந்து எண்ணப்பட்டு உயர்திணையின் சிறப்பு நோக்கி உயர்திணை முடிபு வந்தது. இராமனின் அன்பின் திறத்தை 'அலை உருவ. . . மண் உருவிற்று ஒரு வாரி' (662) என்ற பாடலும் உணர்த்தும். இராமன் மராமரம் ஏழினையும் துளைத்த செய்தியை ''மராமரம் ஏழும் எய்த வாங்குவில் தடக்கை, வல்வில், இராமனை வெல்ல வல்லவன் என்ப திசையலால் கண்டதில்லை (சீவக. 1643) என்று திருத்தக்கதேவர் பாராட்டுவர். இவ்வாறு ஒரே அம்பால் பலவற்றைத் தாக்கும் வில் தொழிலை 'வல்வில் வேட்டம்' என்பர். 'வேழம் வீழ்த்த விழுத்தொடைப் பகழி, பேழ்வாய் உழுவையைப் பெரும் பிறிது உறீஇப், புழற்றலைப் புகர்க்கலை உருட்டி உரறலைக், கேழற் பன்றி வீழ அயலது, ஆழற் புற்றத்து உடும்பின் செற்றும், வல்வில் வேட்டம் வலம்படுத்திருந்தோன்' (புறம் - 152) என்ற அடிகள் ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கன. இப்பாடலில் ஏழு என்னும் எண்ணால் தொகுதியாய் உள்ள பொருள்களை ஒன்று கூட்டிக் கூறியது ஒப்புமைக் கூட்ட அணி. 'ஏழு' என்ற ஒரே பொருளை உடைய சொல் மீண்டும் மீண்டும் வருவதால் சொற்பொருள்பின் வருநிலை அணியும் பொருந்தியது. 'என்ப' என்பது அசை. 17 |