சுக்கிரீவன் இராமனைப் புகழ்ந்துரைத்தல்

கலிவிருத்தம்

3883.'வையம் நீ! வானும் நீ!
     மற்றும் நீ! மலரின்மேல்
ஐயன் நீ! ஆழிமேல் ஆழி
     வாழ் கையன் நீ!
செய்ய தீ அனைய அத்
     தேவும் நீ! நாயினேன்,
உய்ய வந்து உதவினாய்,
     உலகம் முந்து உதவினாய்!

     வையம் நீ - நிலமும் நீயே! வானும் நீ - ஆகாயமும் நீயே!மற்றும் நீ
-
ஒழிந்த பூதங்களாகிய நீர், காற்று, தீ என்பனவும் நீயே!மலரின் மேல்
ஐயன் நீ -
தாமரை மலரின் மேல் விளங்கும் பிரமதேவனும் நீயே!ஆழிமேல்
-
பாற்கடல் மேல் பள்ளி கொண்ட!ஆழிவாய் கையன் நீ - சக்கரப்படை
தாங்கிய கையுடைய திருமாலும் நீயே!செய்ய தீ அனைய- சிவந்த
நெருப்பினை ஒத்த; அத்தேவும் நீ - அந்த சிவபிரானும் நீயே!உலகம்
முந்து உதவினாய் -
உலகங்களை எல்லாம் முற்காலத்தில் படைத்தருளினாய்;
நாயினேன் உய்ய -
நாய் போன்றவனாகிய நான் நற்கதி அடையும்
பொருட்டு; வந்து உதவினாய் - என்னை நாடி வந்து அருள் புரிந்தாய்.

     இராமனின் வில்லாற்றலை நேரில் கண்ட சுக்கிரீவன் 'இவன் அனுமன்
கூறியாங்கு முழுமுதற் கடவுளாகிய திருமாலின் அவதாரமே' எனத் தெளிந்து
இராமனைப் பலவாறு போற்றலாயினன்.  இராமன் மும்மூர்த்தியாய் விளங்கும்
பரம்பொருளே என்பதைத் தண்டகாரணியத்து முனிவர்கள், விராதன், இந்திரன்,
கவந்தன், சவரி, வாலி ஆகியோர் இராமனைப் போற்றும் பாடல்களில் காண
லாம்.  வையம் நீ, வானும் நீ எனப் பஞ்சபூதங்களுள் முதலதையும்,
இறுதியதையும் கூறிப் பிறவற்றை 'மற்றும்' என்பதனால் பெற வைத்தார்.
'நாயினேன்' என்றதில் சுக்கிரீவன் அடக்கம் புலனாகிறது.  இறைவனின்
கருணைத் திறத்தை 'வந்து உதவினாய்' என்ற தொடர் உணர்த்தும்.     19