துந்துபியின் வறண்ட உடலைப் பார்த்து, இரரமன் வினவுதல்

கலிவிருத்தம்

3886.அண்டமும், அகிலமும் அடைய,
     அன்று அனலிடைப்
பண்டு வெந்தன நெடும்
     பசை வறந்திடினும், வான்
மண்டலம் தொடுவது, அம்
     மலையின்மேல் மலை எனக்
கண்டனன், துந்துபி, கடல்
     அனான், உடல்அரோ!

     நெடும்பசை வறந்திடினும் - மிக்க ரத்தப்பசை வற்றியிருந்தாலும்;
அண்டமும் -
அண்ட கோளங்களும்; அகிலமும் - (அவற்றில் அடங்கிய)
எல்லா உலகங்களும்; அடைய - ஒருங்கே; அன்று - அந்நாளில் (ஊழி
முடிவில்); பண்டு- முன்னே; அனலிடை- ஊழித் தீயில்பட்டு; வெந்து அன-
வெந்தாற் போன்றதும்; வான் மண்டலம் தொடுவது - ஆகாய
மண்டலத்தைப் போய்த் தொடுவதுமான; கடல் அனான் துந்துபி உடல் -
கடல் போன்றவனான துந்துபி என்னும் அரக்கனின் உடல்; அம்மலையின்
மேல் -
அந்த ருசியமுக மலையின் மீது; மலை என- மற்றொரு மலை
போல் கிடப்பதை; கண்டனன் - இராமன் கண்டான்.

     ஊழிக்கால இறுதியில் அண்டங்களும் உலகங்களும் வெந்ததை ஒத்தும்,
மலையின் மேல் மற்றொரு மலை இருப்பது போன்றும், வான மண்டலத்தைத்
தொட்டும் கடல்போல் பரந்தும் துந்துபியின் உடலின் எலும்புக்கூடு கிடந்தது
என்க.  பசை வறந்திடினும் தோல், நிணம், தசை முதலியவற்றுடன் இருந்த
நிலையில் அரக்கன் உடலின் பருமனும், உயரமும், வலிமையும் எங்ஙனம்
இருக்குமோ என்பதை உணர வைத்தது.  'பசை வறந்திடினும்' என்னுந் தொடர்
மத்திம தீபமாய் முன்னும் பின்னும் இயையும்.  துந்துபி - துந்துபி என்னும்
பேரிகை போல் பெருமுழக்கம் செய்பவன்.  ஆரவாரம், பெருமை, கருமை
காரணமாகத் துந்துபிக்குக் கடல் உவமைஆயிற்று.                    1