துந்துபியின் வரலாறு 3888. | 'துந்துபிப் பெயருடைச் சுடு சினத்து அவுணன், மீது இந்துவைத் தொட நிமிர்ந்து எழு மருப்பு இணையினான், மந்தரக் கிரி எனப் பெரியவன், மகர நீர் சிந்திட, கரு நிறத்து அரியினைத் தேடுவான். |
மீது இந்துவைத் தொட - மேலே (வானில்) உள்ள சந்திரனைத் தொடும்படியாக; நிமிர்ந்து எழு - மேலெழுந்து வளர்ந்துள்ள; மருப்பு இணையினான் - இரண்டு கொம்புகளை உடையவனும்; மந்தரக்கிரி எனப் பெரியவன் - மந்தர மலை போன்ற பெரிய உருவத்தை உடைய வனுமான; துந்துபிப் பெயருடை - துந்துபி என்னும் பெயருடைய; சுடு சினத்து அவுணன் - தீப்போல் சுடுகின்ற கோபத்தை உடைய அசுரன்; மகர நீர் சிந்திட - கடலில் உள்ள நீர் சிதறும் படியாக; கரு நிறத்து அரியினை - கரிய நிறத்தை உடைய திருமாலை; தேடுவான் - தேடிச் சென்றான். முன் பாடலில் 'மயிடமோ' என்றதாலும் இங்கு 'மருப்பிணையினான்' என்றதாலும் 'துந்துபி' எருமை வடிவினன் என்பது புலனாகும். 'மகரநீர் சிந்திட' என்றதால் கடலைக் கலக்கிக் கொண்டு தேடினான்' என்பது பெறப்படுகிறது. எருமையின் இயல்பிற்கேற்ப நீரைக் கலக்கினான் என அறியலாம். 3 |