3889. | 'அங்கு வந்து அரி எதிர்ந்து, ''அமைதி ஏன்? '' என்றலும், ''பொங்கு வெஞ் செருவினில் பொருதி'' என்று உரைசெய, ''கங்கையின் கணவன், அக் கறை மிடற்று இறைவனே உங்கள் வெங் கத வலிக்கு ஒருவன்'' என்று உரை செய்தான். |
அங்கு - அவ்விடத்தில்; அரி வந்து எதிர்ந்து - திருமால் எதிரில் வந்து; அமைதி என் என்றலும் - 'நீ இங்கு வந்த காரணம் யாது' என்று வினவிய அளவில்; பொங்கு வெஞ் செருவினில் - சீற்றம் கொண்டு செய்கின்ற கொடிய போரில்; பொருதி என்று உரை செய் - 'என்னோடு போர் செய்வாயாக என்று துந்துபி கூற; கங்கையின் கணவன் - (அதற்குத் திருமால்) 'கங்கா தேவியின் கணவனான; அக்கறை மிடற்று இறைவனை - நஞ்சுண்டதால் கறுத்த கண்டத்தை உடைய அந்தச் சிவபெருமானே; உங்கள் வெம்கதம் வலிக்கு - உங்ககளப் போன்றவர்களின் கோபமிக்க வலிமைக்கு; ஒருவன் - போரிடக்கூடிய ஒருவன் ஆவான'; என்று உரை செய்தான் - என்று உரைத்தான். வாலியால் துந்துபி கொல்லப்படவேண்டும் என்பது ஊழ்வினையாதலால், திருமால் அவனொடு போர் செய்து கொல்லாது இங்ஙனம் கூறினார் எனக் கொள்க. கங்கையைச் சிவபிரான் தன் தலையில் கொண்டமையால் 'கங்கையின் கணவன்' எனப்பட்டான். இறைவனே ஏகாரம் பிரிநிலை. 4 |